செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ’மிஸ் தமிழ்நாடு 2022 அழகி’ பட்டத்தை வென்றுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி மனோகரின் மகள் ரக்சயா. இவர் கல்லூரி படிப்பை முடித்திருந்தாலும் சிறு வயது முதலே அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற கனவு இவரிடம் இருந்துள்ளது.
இதற்கு குடும்ப வறுமை தடையாக இருக்கக் கூடாது என்று பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே அழகிப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தன்னை தயார்ப்படுத்தி வந்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இவர், அரசு சார்பில் மலேசியா அழைத்துச் சென்று கவுரவிக்கப்பட்டார்.
அதன்பிறகு, ஃபார்எவர் ஸ்டார் இந்தியா அவார்ட்ஸ் நடத்திய மாவட்ட அளவிலான அழகிப் போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூரில் இந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை மாநில அளவிலான அழகிப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டிலிருந்து போட்டியில் கலந்துகொண்ட ரக்சயா, மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றுள்ளார். அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.
மேலும் வருகிற டிசம்பர் மாதம் மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் இந்தியா முழுவதும் தேர்வாகிய வின்னர், ரன்னர் என அனைவரும் ஸ்டேஜ் ஷோ செய்ய உள்ளனர். இதில் தேர்வாகிய நபர், மிஸ் இந்தியா பட்டத்தை வெல்வார்.
”மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்துகொண்டு நிச்சயம் பட்டத்தை வெற்றி பெறுவேன்” என மிஸ் தமிழ்நாடு ரக்சயா நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரக்சயாவின் பெற்றோர், “நாங்கள் வறுமையிலிருந்தபோது சிலர் என் மகளின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டனர். அவள் மேற்படிப்பை முடித்து விடாமுயற்சியுடன் செயல்பட்டதால், தற்போது மிஸ் இந்தியா பட்டத்தை வென்று இருக்கிறாள். அடுத்து மிஸ் இந்தியா போட்டியிலும் கலந்துகொள்ள இருக்கிறாள். அதிலும் ரக்சயா வெற்றி பெறுவாள் என்று நம்புகிறோம்” என்று கூறினர்.
மோனிஷா
’ஸ்மார்ட் ஆக விளையாடினால் போதும்’ – சூர்ய குமார் யாதவ்
மூன்று நாட்களுக்கு கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!