செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயிலை மறித்து லோகோ பைலட்டை தாக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரயிலை நாள்தோறும் அதிகளவில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 17) சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. ரயிலானது செங்கல்பட்டு அருகே வந்துகொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் ரயிலை மறித்துள்ளார்.
ரயில் நிலையம் அருகில் மின்சார ரயில் மெதுவாக வந்துகொண்டிருந்ததால் லோகோ பைலட் ரயிலை நிறுத்தியுள்ளார். அப்போது ரயிலை மறித்த நபர் லோகோ பைலட் பெட்டியில் ஏறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரை தாக்கி அவரது இருக்கையில் அமர்ந்து மின்சார ரயிலை இயக்க முயன்றுள்ளார்.
இதனை தொடர்ந்து ரயில்வே காவல்துறை அதிகாரிகளுக்கு லோகோ பைலட் தொலைபேசி வாயிலாக தகவல் கொடுத்துள்ளார். ரயிலை மறித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
காவல்துறை நடத்திய விசாரணையில் லோகோ பைலட்டை தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் அரியலூர் மாவட்டம் வெள்ளந்தை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவரிடம் தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் பயணிக்கும் புறநகர் மின்சார ரயிலை மறித்து லோகோ பைலட்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செல்வம்
ஜெயிலர் வசூல் எவ்வளவு? – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!