பேருந்து பயணத்தில் பேரிடர்: இன்ஸ்பெக்டர் செய்த இமாலய உதவி!
இறந்த மூதாட்டியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல பணம் இல்லாமல் தவித்த முதியவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் அசோகன்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் அருணாச்சலம், செல்வி மூதாட்டி தம்பதிகள். இவர்கள் சென்னையை அடுத்த பம்மலில் வாடகை வீட்டில் வசித்து, அந்த பகுதியில் உள்ள சிறிய உணவகத்தில் இருவரும் வேலை செய்து வந்தனர்.
செல்வி, கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சையளித்தும் செல்வியின் உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாததால், அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல அருணாச்சலம் முடிவு செய்தார்.
அதன்படி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து ஆட்டோ மூலம் செல்வியை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கிருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில் இருவரும் ஏறினார்கள்.
பேருந்தில் ஏறியதிலிருந்தே மயக்க நிலையில் இருந்துள்ளார் செல்வி. சிங்கப்பெருமாள் கோவில் அருகே பேருந்து சென்ற போது, நடத்துனர் செல்வியின் உடல்நிலை குறித்து கணவர் அருணாச்சலத்திடம் கேட்ட போது சற்று நேரத்தில் எழுந்து விடுவார் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் செல்வி மயக்க நிலையிலிருந்து எழுந்திருக்காததால், பேருந்து நடத்துனர் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பேருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே சென்ற போது, ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் செல்வியின் உடல்நலனை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
உயிரிழந்த செல்வியை தனியாக ஆம்புலன்சில் அவரது சொந்த ஊருக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அருணாச்சலத்திடம் பணம் இல்லாததால் அவர் செய்வதறியாது திகைத்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா ஆய்வாளர் அசோகன், உயிரிழந்த செல்வியை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தனது சொந்த பணத்தில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து கண்ணீர் மல்க ஆய்வாளர் அசோகனுக்கு நன்றி தெரிவித்த அருணாச்சலம் தனது மனைவியின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி புறப்பட்டார்.
ஒரு துயரமான நேரத்தில் முதியவருக்கு உதவிய காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
செல்வம்
தமிழகத்தில் நவம்பர் 6 வரை கனமழை!
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து நீர் திறப்பு!