செங்கல்பட்டு பாலாறு பகுதியில் பழமையான கற்கோடரி… அகழாய்வு செய்ய கோரிக்கை!

Published On:

| By Selvam

வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் செங்கல்பட்டு பாலாறு பகுதிகளில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பாண்டூர் உயர்நிலைப் பள்ளி வரலாறு ஆசிரியர் வடிவேல் மாணவ, மாணவியருக்கு தொல்லியல் எச்சங்கள் பற்றிய பயிற்சி அளித்து தங்கள் பகுதியில் கள ஆய்வில் ஈடுபடும்படி உற்சாகப்படுத்தி உள்ளார்.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட பாண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மணிகண்டன் பாலாறு நீர்வழிப்பகுதியான இரும்புலிச்சேரி ஆற்றுப் படுகையில் புதிய கற்கால கைக்‌கோடரியை கண்டெடுத்து, ஆசிரியர் வடிவேலிடம் ஒப்படைத்துள்ளான்.

தொல்லியல் ஆய்வாளரான ஆசிரியர் வடிவேல் இதை ஆய்வு செய்கையில், வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் பயன்படுத்திய இந்த கற்கருவி சுமார் 7 முதல் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்தது எனவும் குறுகிய பட்டை பகுதி கொண்ட இந்த கற்கோடரி மிருகங்களை வேட்டையாடும் ஆயுதமாகவும், நிலத்தை சமன்படுத்தவும் பயன்படுத்தி இருக்கலாம் எனவும் கண்டறிந்தார். மேலும், 4.7 செ.மீ அகலம் 10 செ மீ நீளம் கொண்ட இந்த கற்கருவியை கண்டறிந்த மாணவன் மணிகண்டனை தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டினார்.

செங்கல்பட்டு பாலாறு பகுதிகளில் இது போன்ற கருவிகள் பரவலாக காணப்படுவதாகவும் 1863 ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் தந்தை என்றழைக்கப்படும் புவியியலாளர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராபர்ட் புரூஸ் ஃபுட் சென்னை பல்லாவரத்தில் பழைய கற்கால கைக்கோடரிகளைக் கண்டுபிடித்து சேப்பியன் இன மக்கள் இங்கிருந்து இடம்பெயர்ந்து உள்ளதற்கான ஆதாரத்தை வெளியிட்டார்.

அதனடிப்படையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு பாலாறு சுற்றுவட்டார பகுதிகளில் வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் கடந்த சில மாதங்களாக மேற்பரப்பு கள ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது,

“பாலாறு பகுதிகளில் சில்லு கற்கள் உள்ளிட்ட பழைய, புதிய மற்றும் சங்ககால தொல்லியல் எச்சங்கள் ஏராளமான கிடைக்கிறது. மலையில் வாழத் துவங்கிய மனிதன், சமவெளிகள், மலையடிவாரங்கள், ஆற்றங்கரைகளில் வாழ்ந்தான் என்பதற்கு சான்றாக இந்த கற்கருவிகள் உள்ளது.

இந்த பகுதியில் மேலும் ஆய்வு செய்தால், கூடுதல் சான்றுகள் கிடைக்கக்கூடும். சமீபத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை சார்பில் செங்கல்பட்டு பாலாறு பகுதியில் பழைய கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்பு கூடுகளை கண்டறியப்பட்டது. தமிழ்நாடு தொல்லியல் துறை இந்த பகுதியில் ஆய்வு செய்து தமிழர்கள் பண்பாட்டு நாகரீக வளர்ச்சி படி நிலையை ஆய்வு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘கொட்டுக்காளி’… படம் பார்க்கத் தூண்டும் கமல் விமர்சனம்!

இன்னும் ஒரே வாரம்தான்… சம்பாய் சோரன் முக்கிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment