செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் போலீஸ் என்கவுண்டரில் இருவர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காரணை புதுச்சேரி பகுதியில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வாகன சோதனையின் போது போலீசாரை அரிவாளால் தாக்கி விட்டு தப்பி ஓடியதாக வினோத் என்ற சோட்டா வினோத், ரமேஷ் என்ற இரண்டு ரவுடிகளை காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர்.
இந்த என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக்கோரி சோட்டா வினோத்தின் தாயார் ராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “என்கவுண்டர் நடந்த அன்று எனது மகன் வினோத் அவரது நண்பர் ரமேஷ் இருவரும் சிறுசேரியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். அங்கு வந்த போலீசார் ஹோட்டலில் இருந்து இருவரையும் அழைத்து சென்று என்கவுண்டர் செய்துள்ளனர். இது ஒரு போலி என்கவுண்டர். இதுகுறித்து செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் மற்றும் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “போலீஸ் என்கவுண்டர், லாக் அப் மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு என்கவுண்டர் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து என்கவுண்டர் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செல்வம்
லியோ போஸ்டர் வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் இதுதான்!
உடைந்த கூட்டணி: போஸ்டர் ஒட்டி மோதும் அதிமுக – பாஜகவினர்!