ஃபிரிட்ஜ் வெடிக்க என்ன காரணம்? உஷார் மக்களே உஷார்!
சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் இன்று (நவம்பர் 4) காலை குளிர்சாதனப் பெட்டி வெடித்து 3 பேர் உயிரிழந்ததற்குச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல்நாத் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஊரப்பாக்கத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்த வெங்கட்ராமன் என்பவரின் நினைவு தினத்திற்காகத் துபாயிலிருந்து வெங்கட்ராமன் மனைவி கிரிஜா, இவரது தங்கை ராதா மற்றும் ராஜ்குமார் ஆகிய மூவரும் நேற்றைய தினம் சென்னை வந்தனர்.
குளிர்சாதனப் பெட்டி வெடிப்பு
இரவு இவர்கள் மூவரும் தூங்கிக் கொண்டிருந்த அறையிலிருந்த குளிர்சாதனப் பெட்டி இன்று காலையில் வெடித்தது.
இதனால் ஏற்பட்ட புகையில் கிரிஜா, ராதா, ராஜ்குமார் மூவருமே மூச்சு திணறி உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் மற்றொரு அறையில் தங்கியிருந்த பார்கவி மற்றும் அவரது மகள் ஆராத்தியா ஆகிய இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று அதிகாலை நடைபெற்ற இந்த துயரமான சம்பவம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
நேற்றுதான் சென்னை வந்தனர்
அவர் கூறுகையில், “ஊரப்பாக்கம், ஜெயலட்சுமி தெரு ஆர். ஆர். பிரிந்தாவன் எஃப்2 என்ற அப்பார்ட்மெண்டின் முதல் மாடியில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் குளிர்சாதனப் பெட்டி வெடித்ததால் ஏற்பட்ட புகையில் கிரிஜா, ராதா, ராஜ்குமார் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
ராதாவை தவிர மற்ற அனைவரும் துபாயிலிருந்து நேற்றைய தினம் ஒரு விழாவிற்காக இங்கு வந்துள்ளனர்.
கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த வீடு பூட்டி வைக்கப்பட்டிருந்தது. ஒரு வருடமாக இயங்காமல் இருந்த குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்தியதால் அது வெடித்தது புகை அறை முழுவதும் பரவியுள்ளது.
வீட்டிலிருந்த கதவு ஜன்னல் அனைத்து மூடி வைக்கப்பட்டிருந்ததால் புகை வெளியேறவில்லை.
அதிகாரிகள் ஆய்வு
மின்கசிவு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகள் வந்துள்ளனர். முதற்கட்ட ஆய்வில் மின்கசிவு இருப்பதாகத் தெரியவில்லை.
இவர்கள் மூவரைத் தவிர ராஜ்குமாரின் மனைவி பார்கவி மற்றும் மகள் ஆராத்தியா ஆகிய இருவரும் வேறு அறையில் இருந்திருக்கிறார்கள். ஆகையால் இவர்கள் இருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. மேலும் இருவருக்கும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் என்னவென்றால், நீண்ட நாட்களாக இயங்காமல் இருக்கக்கூடிய குளிர்சாதனப்பெட்டி மற்றும் ஏசியை பயன்படுத்துவதற்கு முன்பு எலக்ட்ரீஷியனை அழைத்துப் பரிசோதித்து விட்டுப் பயன்படுத்துங்கள்.
நீண்ட நாட்களாகப் பூட்டி கிடக்கும் வீட்டில் குடியிருக்கப் போகும் போதும் மின் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை முழுமையாகச் சரிபார்த்த பிறகு பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.
மோனிஷா
“குஜராத்தை விட தமிழகத்தில் பால் விலை குறைவு” – நாசர்
திமுக நிர்வாகி மீது தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பூ புகார்!