மகப்பேறுக்கு செல்லும் பெண் போலீசாருக்கு பணி மாறுதல் தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 23) வெளியிட்டுள்ளார்.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 23) மாலை காவல் துறை சார்பில் இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, காவல்துறையினரை பாராட்டி பேசினார்.
அப்போது அவர், “அமைதியான மாநிலத்தில்தான் வளமும் வளர்ச்சியும் இருக்கும். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மனித வளர்ச்சிக் குறியீடுகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.இத்தகைய பெருமையை அரசுக்கு உருவாக்கித் தரும் காவலர்கள் எல்லோருமே பதக்கங்களுக்கு தகுதி படைத்தவர்கள்தான்” என்று வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து அவர், “காவல்துறையில் முதன்முதலாக மகளிரை இடம்பெறச் செய்தது கலைஞர்தான். இன்று எனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதை கமாண்டாராக ஒரு பெண் அதிகாரி இருந்து அந்த காட்சியை நீங்கள் பார்த்தீர்கள். அது எனக்கு மிகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.
மகளிர் பொன்விழா ஆண்டான இப்போது, மகளிர் காவலர்களிடையே நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கோரிக்கையை மிகுந்த மகிழ்ச்சியோடும் மனைநிறைவோடும், இந்த நிகழ்ச்சியில் அறிவிப்பாக நான் வெளியிட விரும்புகிறேன்.
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து, அவர்கள் பணிக்கு திரும்பும்போது அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
அவர்கள் கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் குற்றச்செயல் பிரச்னைகளை தீர்ப்பதில் நம்முடைய பெண்காவலர்கள் மிக முக்கிய பங்காற்றுகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட குற்றங்களை கையாளுவதில் பெண் காவலர்களின் தொழில்முறைத் திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு அவர்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சி அளிக்கப்படும்” என்று அறிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அணிவகுக்கும் பக்தர்கள்: களைகட்டும் முருகன் மாநாடு… முழு விவரம் இதோ!