அருணாச்சல பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 2 விமானிகளில் ஒருவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மிஸ்ஸமாரியில் இருந்து அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தவாங் நோக்கி நேற்று (மார்ச் 16) காலை புறப்பட்டது.4
பறக்க ஆரம்பித்த சில மணி நேரத்தில், சரியாக காலை 9.15 மணியளவில் ஹெலிகாப்டரின் விமானிகளுடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பதற்றமான கட்டுப்பாட்டு அறையினர், ஹெலிகாப்டரில் இருந்து கடைசியாக கிடைத்த ஜிபிஎஸ் சிக்னலை வைத்து தேட தொடங்கினர்.
இந்த நிலையில் தான், அருணாச்சல பிரதேசம் காமெங் மாவட்டத்தில் உள்ள பங்களாஜாப் கிராமப் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் விரைந்தனர்.
ஆனால், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இயக்கிய 2 விமானிகள் இல்லை. மாயமான விமானிகளை தேடும் பணியில் இந்திய ராணுவம், எஸ்எஸ்பி மற்றும் ஐடிபிபி ஆகியவற்றின் ஐந்து குழுக்கள் தீவிரமாக செயல்பட்டனர்.
ஆனால் பனிமூட்டம் காரணமாக விமானிகளை தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தான், சீட்டா ஹெலிகாப்டரில் பயணித்த விமானி லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி மற்றும் துணை விமானி மேஜர் ஜெயந்தின் உடல்கள் அதே பகுதியில் சடலமாக பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டன.
விமானிகள் உயிரிழந்ததை பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் மகேந்திர ராவத் உறுதிப்படுத்தினார்.
மேலும் உயிரிழந்த விமானிகளின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 2 விமானிகளில் ஒருவர் தமிழ்நாடு தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த இளம் ராணுவ விமானியான ஜெயந்த் என்பது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த விமானிகளின் உடல்கள் டெல்லி விமானப்படைத் தளத்திற்குக் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து லெப்டினண்ட் கர்னல் விவிபி ரெட்டியின் உடல் ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேஜர் ஜெயந்த் உடலும் திருச்சி அல்லது மதுரை வரும் விமானம் மூலமாகத் தமிழகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் மேஜர் ஜெயந்த் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
பின்னர், அவரது உடல் சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள ஜெயமங்கலத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
அங்கு காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ விமானியின் மரணம் தேனி பகுதியில் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா