நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா புதுக்குடியில் நெசவாளர்களால் பிரத்யேகமாக நெய்யப்படும் செடி புட்டா கைத்தறி சேலைகளுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அறிவித்துள்ளது. அரசின் இந்த செய்தி இப்பகுதி நெசவாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவில் உள்ள புதுக்குடி, கிளாக்குளம், வீரவநல்லூர், வெள்ளாங்குழி உள்ளிட்ட நான்கு கிராமங்களில் சுமார் 1,000 கைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன.
இங்கு வசிக்கும் பலரும் தலைமுறை தலைமுறையாக நெசவு தொழிலை மட்டுமே நம்பி தங்களது வாழ்க்கை முறைகளை கழித்து வருகிறார்கள்.
இதில், புதுக்குடி கிராமத்தில் தான் மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்ற செடி புட்டா சேலைகள் அதிக அளவில் நெய்யப்படுகிறது.
சுமார் 250 வீடுகள் வரை உள்ள இக்கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் கைத்தறி நெசவு கூடங்களை அமைத்துள்ளனர் என்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பிரதிபலிக்கும் வகையில், தகரங்களாலும் ஓடுகளாலும் அமைந்துள்ள இந்த வீடுகளுக்குள்ளேதான், தொழில் செய்யும் கைத்தறிக் கூடங்களும் அமைந்துள்ளன.
அதாவது ஒரு அறையில் தறி, மறு அறையில் சமையலறை. தறிக்கு அருகிலேயே சாப்பாடு, தூக்கம், கனவு என வீடே கைத்தறி கூடம், கைத்தறி கூடமே வீடு என நெசவாளர்களின் வாழ்க்கை சிறிய வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறது.
குறுகலான இடங்கள், இருக்கும் இடத்தில் தறி இயந்திரம். கை,கால்களை நீட்டி உட்கார முடியாத குறுகலான நான்கு சுவர்களுக்குள் இருந்து பட்டாம்பூச்சி பறந்து வருவது போல வெளியே வருகிறது, அந்த அழகான செடி புட்டா சேலை ரகங்கள்.
பெரியதாக சொல்லி கொள்ளும் படியாக லாபம் இல்லாத தொழில் என்றே கூறலாம். குறைந்தபட்ச பொருளாதார நிலையின் குறியீடாகவே நெசவாளர்கள் காட்சியளிக்கிறார்கள்.
வியர்வை சிந்த, கைகள் அங்கும் இங்கும் இடைவிடாமல் உழைக்க, மிகவும் நேரமெடுத்து இவர்கள் நெய்யும் சேலைகளில் தங்கள் திறமையை முழுமையாக காட்டி ஆடம்பரத்தின் உச்சமாக தயாரிக்கின்றனர். இப்படி மெனக்கெடலினுடன் தயாரிக்கப்படும் சேலைகளின் பெயர்தான், செடி புட்டா சேலைகள். இவைதான் புவிசார் குறியீட்டை அடையாளமாக பெற்றுள்ளன.
எப்படி தோன்றியது இந்த செடி புட்டா சேலைகள் ?
கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படாத 1970 – 75 காலகட்டத்தில் மதுரையைச் சேர்ந்த என்.ஏ.ராமமூர்த்தி என்பவர், புதுக்குடி மக்களிடம் செடி புட்டா சேலை நெய்வது குறித்து கற்றுக் கொடுத்துள்ளார். அவரால் தான் 50 ஆண்டுகளை கடந்து இன்றும் செடி புட்டா சேலைகள் நெய்யப்படுகிறது என்கின்றனர் இந்த பகுதி பொது மக்கள்.
கூலியோ குறைவு வேலையோ அதிகம்!
ஒரு சேலை நெய்வதற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆகும். ஒரு சேலைக்கு சங்கத்தின் மூலம் 486 ரூபாய் கூலி கொடுக்கப்படுகிறது. இந்த கூலியில் 8 சதவீதம் சிக்கனம் என (39 ரூபாய் பிடித்தம்) சேமிப்பாக சங்கத்தின் மூலம் பிடிக்கப்படுகிறது. சேமிப்பு பிடித்தல் போக 447 ரூபாய் மட்டுமே ஒரு சேலைக்கு கூலியாக கிடைக்கிறது. 10 சேலைகள் நெய்தால் தான் ₹4,470 கூலி கிடைக்கும் என்கிறார்கள் நெசவாளர்கள்.
இந்த குறைந்த வருவாய் காரணமாகவே செடி புட்டா சேலைகள் நெய்வதற்கு நெசவாளர்கள் பலரும் முன் வருவதில்லை. 50 வயதை தாண்டிய நெசவாளர்கள் மட்டுமே மிகவும் மெனக்கெட்டு செய்யக்கூடிய இந்த செடி புட்டா கைத்தறி சேலைகளை நெய்து வருவதாக கூறுகின்றனர்.
புவிசார் குறியீடு கிடைத்து விட்டது – எங்களின் வாழ்வாதாரம் மாறுமா ?
செடி புட்டா சேலைகளுக்கு அரசின் அங்கீகாரம் புவிசார் குறியீடு மூலம் தற்போது கிடைத்து விட்டது. இது 50 ஆண்டு காலமாக நெய்து கொண்டிருக்கும் நெசவாளர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஆனாலும், நெசவு செய்யும் ஒவ்வொருவர் வீட்டிலும் தறி ஓடும் சத்தத்தின் பின்னணியில் விடுபட்ட நூலை போல இருக்கும் அவர்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச கூலி உயர்வுக்கான குரல் பலருக்கும் கேட்கவில்லை என்பதே யதார்த்த உண்மை.
புதுக்குடியை சேர்ந்த அருண் பிரகாஷ் நம்மிடம் பேசும்போது, “செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு கிடைச்சது ரொம்ப மகிழ்ச்சி. இதனால எங்களோட வாழ்க்கை தரம் உயரும்னு நம்புறோம். எங்க தாத்தா காலத்துல இருந்து நாங்க நெசவு வேலை தான் செஞ்சுகிட்டு வர்றோம். எங்க அப்பா அம்மாவும் நெசவு வேலை தான் செய்யுறாங்க.
இந்த தொழில் இப்போம் நலிவடைஞ்சுகிட்டு வருவதால் இளைஞர்கள் யாரும் நெசவு தொழில் பண்றதில்லை. வேற வேலைக்கு தான் போறாங்க. நெசவு வேலை நேரம் அதிகம், முழு உடல் உழைப்பு தேவை. இதனால எங்களோட வாழ்வாதாரம் உயரவே இல்லை. இளைஞர்கள் பலரும் வேற வேலைக்கு போக ஆரம்பிச்ச்சிட்டாங்க. சுத்தமான பருத்தி நூல்ல தான் செடிபுட்டா சேலை தயார் செய்வோம். எந்தவிதமான கெமிக்கல் சாயமும் சேர்க்க மாட்டோம். இந்த சேலை அணிவதால உடலுக்கு எந்த ஒவ்வாமையும் ஏற்படாது. இந்த சேலைக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கு” என்றார்.
அதே பகுதியை சேர்ந்த தேவி, “38 வருசமா நெசவு வேலை தான் செஞ்சிட்டு வர்றேன். தறி நெய்யும் போது 14 வயசுல 225 ரூவா கொடுத்தாங்க. இப்போம் 3250 ரூவா தாராங்க. தறி நெய்யுறது ரொம்ப கஷ்டம். இருந்தாலும் வேற தொழில் தெரியாததால இத செய்யுறோம். ஆனா எங்க கூலி உயரவே இல்லை. இதனால பசங்கள வேற வேலைக்கு அனுப்பிட்டோம்” என்று இயலாமையுடன் கூறுகிறார்.
தமிழர்களின் பாரம்பரிய திருவிழா, திருமணம், பண்டிகை காலங்களில் இது போன்ற அழியும் தருவாயில் இருக்க கூடிய தொழிலாளர்கள் தயாரித்து விற்கும் சேலை ரகங்களை நாம் வாங்கி பயன்படுத்த தொடங்கினால் மட்டுமே இது போன்ற தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகளை மீட்டெடுக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை . அதுமட்டுமில்லாமல் தமிழக அரசின் கடைக்கோடி பார்வை கொஞ்சம் இவர்கள் மீதும் திரும்பினால் மட்டுமே சுழலும் தறி நிற்காமல் இயங்கும் என்கிறார்கள் செடி புட்டா சேலைகளை நெசவு செய்யும் தொழிலாளர்கள்.
நெல்லை சரவணன்
ரத்னவேல் கதாபாத்திரம்: பேஸ்புக் கவர் போட்டோவை நீக்கிய பகத் பாசில்
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைவு!