நா.மணி govt bus time will protect tribal studies
மலைப்பகுதிகளில் வாழ்வது என்பதே ஓர் அசாதாரண வாழ்வுதான். மலை மக்கள் வெளி உலகத்தோடு தொடர்பு கொள்வதும், தொடர்ந்து வாழ்வெனும் பயணத்தை தொடர்வதும் மிகவும் கடினமான காரியம். அதனை இயல்பானதாக எடுத்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
மலைப் பகுதியில் வாழும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதும், அவை அவர்களது பயன்பாட்டிற்கு வருவதும் கூட மிகவும் கடினமான செயலே. இன்னும் பள்ளியை பார்க்காத சிறுவர்கள் வாழும் மலை கிராமங்கள் உண்டு.
தொண்டு நிறுவனங்கள், குழந்தை தொழிலாளர் நலப் பள்ளிகளை நம்பி கொஞ்சம் கொஞ்சமாக கல்வி அறிவு பெரும் குழந்தைகள் உண்டு. எப்படியோ முடிந்த மட்டும் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது. எனவேதான் கல்வி உரிமை சட்டம் மலைப் பகுதியில் பள்ளிகள் இருக்க வேண்டிய தூரத்தை, மாற்றி வரையறை செய்து உள்ளது. ஓரிடத்தில் வாழும் குழந்தை அது நடந்து சென்று வரும் தூரத்தில் துவக்கப் பள்ளி இருக்க வேண்டும் என்கிறது.
இவ்வாறு அமையும் மலை கிராம பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வந்து சேர்வதும், அவர் தினமும் பள்ளிக்கு வருவதும், பாடம் எடுப்பதும் கடினமான செயலாக தொடர்கிறது. தினமும் ஆசிரியரும் மாணவரும் வருகிறார். தொடக்க நிலை வகுப்புகளுக்கு வரும் மாணவனுக்கு, தமிழ் தெரியாது. ஆசிரியருக்கு பழங்குடி குழந்தைகள் பேசும் மொழி புரியாது. இதனையெல்லாம் தாண்டியே கற்றல் நடைபெற்று, ஒரு மாணவன் கற்றுத் தேர்ந்து கொஞ்சம் முன்னேற்றம் காண வேண்டும்.
மலை கிராம பள்ளிகள்
பல மலை கிராமங்களில் ஐந்தாம் வகுப்பு வரைதான் பள்ளிகள் இருக்கும். எட்டாம் வகுப்புக்கு செல்ல அந்த சிறுவர்கள் வனவிலங்கு நடமாடும் உள்ள மலைப் பகுதியில் நடந்து செல்ல வேண்டும். உயர் நிலைப் பள்ளிக்கோ அல்லது மேல்நிலைப் பள்ளிக்கோ செல்ல இன்னும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும். இல்லையெனில் தொலை தூரத்தில் ஓர் உண்டு உறைவிடப் பள்ளிக்கு செல்ல வேண்டும்.
இளம் வயதிலேயே பெற்றோரைப் பிரிந்து விடுதி வாழ்க்கை மேற்கொள்ள தயாராக வேண்டும். குறைந்த பட்ச கல்வியை கற்று, வெளி உலகை பார்க்கவும், புரிந்து கொள்ளவும், குறைந்த பட்ச திறன்களை கற்றுக் கொள்ளவும் மலைப் பகுதி குழந்தைகள் கஷ்டப்பட வேண்டும். பிற பகுதி மக்கள், எளிமையாக கற்றுக் கொள்ளும் பள்ளிக் கல்வியை, மலை மக்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு வரை அமைந்த பள்ளியின் வேதனை
ஒரு மலைப் பகுதியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தங்கள் சொந்த கிராமத்திலிருந்து கல்வியை கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு வருகிறது. இந்த நிலையை எண்ணிப் பார்த்தே அந்த ஊர் மக்கள், மாணவர்கள், அந்தப் பகுதியில் பணியாற்றி வரும் கல்வி செயல்பாட்டாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். பெரும் எதிர்பார்ப்போடு அந்தப் பள்ளிக்காக காத்திருந்தனர். 2021 ஆம் ஆண்டில் அந்தப் பள்ளியும் துவங்கப்பட்டு விட்டது. இப்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது.
பள்ளியை எதிர்பார்த்து காத்திருந்த உற்சாகம் கரைந்து கொண்டு வருகிறது ஒரு பகுதி மக்களிடம். பள்ளி நன்கு செயல்படுகிறது. ஆசிரியர்கள் ஓரளவுக்கு இருக்கிறார்கள். ஆனால் வந்து போகும் பேருந்து வசதி, இருந்தும் இல்லாத நிலையால் படிப்பை தொடர முடியாமல் இருக்கிறார்கள். அல்லது நீண்ட நெடுந்தூரம் சென்று விடுதி வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அங்கு படிக்கும் மாணவர்களின் நிலையும் பெற்றோர்களின் நிலையும் வேதனைக்கு உரியதாக மாறி இருக்கிறது. அவர்களின் அந்த வேதனை என்னவாக இருக்கும்?
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள கடம்பூர். இங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோட்டமாளம் என்னும் கிராமம். இங்குள்ள பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 2021 ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியாக உருவெடுத்தது. சத்தியமங்கலத்திலிருந்து கேர்மாளம் செக்போஸ்ட் சென்று திரும்பும் பேருந்து, பள்ளியின் முன்பாக 10.30 மணிக்கு வருகிறது.
பள்ளி துவங்கி ஒன்றேகால் மணி நேரம் கழித்து வருகிறது. அந்த ஒற்றைப் பேருந்து தான் பள்ளிக்கு வந்து செல்ல உபாயம். மாலை 4.15 மணிக்கு பள்ளி நிறைவடைகிறது. ஆனால் மாலை 3.30 மணிக்கே இதே பேருந்து பள்ளியை கடந்து விடுகிறது. இதன் காரணமாக, வருடம் ஒன்றுக்கு 220 மணி நேரம் பாடம் பாதிக்கப்படுகிறது. பாட வேளை என்று கணக்கிட்டால் 660 பாட வேளைகள் பாதிக்கப்படுகிறது.
என்ன சிக்கல் அந்தப் பள்ளி குழந்தைகளுக்கு
கோட்டமாளம் கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி வந்தபிறகு, பேடர் பாளையம், காடட்டி, நீர் குண்டி, கே.வி. மாளம், சுஜில்கரை, சிக்கநந்தி மற்றும் கேர்மாளம் செக்போஸ்ட் வரையுள்ள கிராம மாணவர்கள், இந்தப் பேருந்து வழியாக மட்டுமே பள்ளிக்கு வந்து செல்ல முடியும். தற்போது 133 பேர் படிக்கும் இப்பள்ளியில், தற்போதைய நிலையில் 19 பேர் இந்த மலை கிராமங்களிலிருந்து வந்து செல்கின்றனர்.
வருடத்தில் 660 பாட வேளை பாதிக்கப்படுவதால், நன்கு படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள், தொலைதூரத்தில் இருக்கும் விடுதிகளுக்கு சென்று தங்கிப் படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். அல்லது, படிப்பை விட்டு குழந்தை தொழிலாளர்களாக மாறலாம்.
இந்தக் குறைந்த பாட வேளை கற்றல் கற்பித்தலோடு தொடரும் மாணவர்கள், போதுமான கற்றல் அடைவுகளை எட்ட முடியாமல், பள்ளி இறுதித் தேர்வில் தோல்வியைத் தழுவி, “நமக்கு இனி படிப்பு வராது” எனத் தங்களுக்குத் தாங்களே முத்திரை குத்திக் கொண்டு, தங்கள் மூதாதையர் தொழிலை தொடரலாம்.
பள்ளிக் கல்வித் துறை அந்தப் பகுதியில் ஓர் மேல்நிலைப் பள்ளியின் முக்கியத்துவம் கருதி, 133 மாணவர்கள் இருந்தபோதும் மேல்நிலைப் பள்ளிக்கு அனுமதி அளித்துள்ளது. எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்னும் மாணவர்கள் அதிகரிக்க வேண்டும். இன்னும் ஆசிரியர்களையும் அதிகரித்து பள்ளிக் கல்வித் தரத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்.2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மேல்நிலைப் பள்ளிக்கு இந்த இயல்பான சவால்கள் இருக்கிறது. இதனையெல்லாம் பள்ளிக் கல்வி சாதிக்கும் முன்பாகவே, தொடக்க நிலை செயல்பாடுகளை முறியடிக்கும் விதமாக, இந்த ஒற்றை பேருந்து இயக்கம், தடையை உருவாக்கி, ஒரு பகுதி பழங்குடி குழந்தைகளின் கற்றலை முறித்து, மலை கிராம மக்களின் கல்வியை முடமாக்கிவிடும் அவலம் உள்ளது.
செலவில்லா எளிய தீர்வு
மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்து துறையும் மனது வைத்தால் எளிய தீர்வு. ஒரேநாளில் தீர்வு. செலவு இல்லாத தீர்வு. காலையில் 10.30 மணிக்கு பள்ளியை கடக்கும் சத்தியமங்கலம் பணிமனையை சேர்ந்த அரசுப் பேருந்து, 9.15 மணிக்கு பள்ளியை கடக்க வேண்டும். அதேபோல் மாலை 3.30 மணிக்கு கடந்து செல்வதற்கு பதிலாக, 4.15 மணிக்கு கடந்து செல்ல வேண்டும். இதுவே இந்தப் பிரச்னைக்கு தீர்வு.
காலையிலும் மாலையிலும் வந்து செல்லும் அரசுப் பேருந்து ஒன்றே ஒன்று தான். அதிகாலையில் 5.00 மணிக்கு சத்தியமங்கலத்தில் புறப்படும் இந்த அரசுப் பேருந்து, காலையில் 8.50 மணிக்கு கேர்மாளம் செக்போஸ்ட் என்ற இடம் சென்று சேர்கிறது. அங்கிருந்து, மீண்டும் 9.00 மணிக்கு புறப்பட்டு, 12.50 மணிக்கு சத்தியமங்கலம் வந்து சேர்கிறது.
அடுத்த டிரிப் மதியம் 1.00 மணிக்கு புறப்பட்டு, சுமார் 5.00 மணிக்கு அதே கேர்மாளம் செக்போஸ்ட் சென்று சேர்கிறது. அதிகாலையில் 5.00 மணிக்கு சத்தியமங்கலத்தில் புறப்படும் பேருந்தை, ஒரு மணி நேரம் முன்னதாக 4.00 மணிக்கு எடுக்கும் படி சத்தியமங்கலம் அரசுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டால் போதும். காலையில் 9.30 மணிக்கும் அதே பேருந்து பள்ளிக்கு வந்து சேரும். மாலை 4.30 மணிக்கும் வந்து செல்ல ஏதுவாக இருக்கும். இந்த சிக்கல் எளிமையான தீர்வை உள்ளடக்கியது.
ஆனால் கோட்டமாளம் அரசு மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், தொடர்ந்து பல முயற்சிகளை இதுவரை மேற்கொண்டுள்ளது. சத்தியமங்கலம் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை அனுகியுள்ளது. ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல இது அந்தப் பகுதியில் படிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோரின் வேதனையாக இது மாறியுள்ளது. பள்ளியில் இடைநிற்றல், கல்வித்தரம் குறைதல், அல்லது விடுதி வசதியுடன் கூடிய வேறு ஏதோவொரு தொலை தூரப் பள்ளி என்ற நிலை வரும் அபாயம் உள்ளது.
மலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியும், பலனில்லாமல் போகும் காலம் நெருங்கி வருகிறது என்று அஞ்சுகின்றனர். பள்ளிக் கல்வித் துறை, மலைப் பகுதியில் நிர்மாணித்திருக்கும் மேல்நிலைப் பள்ளியின் நோக்கம், இது வரை செய்துள்ள இலட்சக்கணக்கான ரூபாய் செலவுகள், உரிய பயனைத் தராமல் போகும் நிலை உருவாகி வருகிறது.
இப்போதேனும் ஒரு பைசா செலவில்லாமல், “ஒரு மணி நேர பயண நேர மாற்றம்” என்னும் உத்தரவின் மூலம் கோட்டமாளம் மேல்நிலைப் பள்ளியையும் அதில் கல்வி கற்று வரும் மாணவர்களையும் தமிழ் நாடு அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் காக்க முன்வருமா?
கட்டுரையாளர் குறிப்புgovt bus time will protect tribal studies
நா.மணி, பேராசிரியர் மற்றும் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர், பொருளாதாரத்துறை, கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மருத்துவக் கல்வியும் நீட் தேர்வு எனும் மோசடியும்!
சிலிண்டர் விலை குறைந்தது… எவ்வளவு தெரியுமா?
ஹெல்த் டிப்ஸ்: முடக்கிப்போடும் ஸ்ட்ரெஸ்… மீளலாம் சுலபமாக!
பியூட்டி டிப்ஸ்: மீண்டும் மீண்டும் பொடுகுத்தொல்லை… மீள்வது எப்படி?
நீட் தேர்வும் இந்திய மக்களாட்சியும்
govt bus time will protect tribal studies