தமிழகத்தில் இயங்கும் மெமு ரயில்களின் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
மெமு ரயில் என்பது மின்சாரத்தைக் கொண்டு குறைந்த மற்றும் நடுத்தர தூரம் பயணம் செய்யும் ரயில் ஆகும். மெமு என்பது மெயின்லைன் எலெக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (Mainline Electric Multiple Unit) என்பதன் சுருக்கம். தமிழகத்தில் காட்பாடி– அரக்கோணம், சென்னை கடற்கரை – மேல்மருவத்துார், திருத்தணி – சென்ட்ரல், பித்ரகுண்டா – சென்ட்ரல் உட்பட பல்வேறு தடங்களில் 10-க்கும் மேற்பட்ட மெமு வகை ரயில்கள் 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா விழா வரும் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இதற்கு அதிக அளவில் ரயில் பெட்டிகள் தேவைப்படுகின்றன. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பெட்டிகளை குறைத்து, அவற்றை கும்பமேளா சிறப்பு ரயில்களில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கடற்கரை – திருவண்ணாமலை (வண்டி எண் 06033), விழுப்புரம் – சென்னை கடற்கரை (06722), திருவண்ணாமலை – தாம்பரம் (06034), தாம்பரம் – விழுப்புரம் (06721), சென்னை எழும்பூர் – புதுச்சேரி (06025/26), தாம்பரம் – விழுப்புரம் (06727/28), புதுச்சேரி – திருப்பதி (16112/11) ஆகிய 10 மெமு ரயில்கள் தற்காலிகமாக 10 பெட்டிகளாக குறைத்து இயக்கப்படும்.
பெட்டிகள் குறைக்கப்பட்டு உள்ளதால் விழுப்புரம் – சென்னை கடற்கரை மெமு ரயில் (06722) வரும் 26-ம் தேதி முதல் தாம்பரம் – கடற்கரை இடையே மெயின் லைனில் இயக்கப்படும். இதனால், கிண்டி, மாம்பலத்தில் மட்டுமே நின்று செல்லும். இதேபோல, சென்னை கடற்கரை – திருவண்ணாமலை மெமு ரயில் (06033) வரும் 27-ம் தேதி முதல் கடற்கரை – தாம்பரம் இடையே மெயின் லைனில் இயக்கப்படும். இதனால், எழும்பூர், மாம்பலம், கிண்டியில் மட்டுமே நிற்கும். இந்த இரண்டு ரயில்களும் பூங்கா, கோட்டை ரயில் நிலையங்களில் நிற்காது.
மேலும், காட்பாடி யார்டில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு ரயில் (06417) இரு மார்க்கங்களிலும் வரும் 23, 30-ம் தேதிகளில் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: எடைக்குறைப்புக்கு உதவுமா வெஜிடபிள் ஜூஸ்?
பியூட்டி டிப்ஸ்: ஃபவுண்டேஷன் பல வகை… உங்களுக்கேற்றது எது?
டாப் 10 நியூஸ் : திமுக தலைமை செயற்குழு கூட்டம் முதல் தேசிய கணித தினம் வரை!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… கருவாடு பிரியரா நீங்கள்? ஒரு நிமிஷம்!