சென்னை ஈசிஆர் பெண்களை துரத்திய வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான சந்துருவை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Chanduru gets 15 days in jail!
சென்னை ஈசிஆர் சாலையில் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை துரத்தி, சாலையின் குறுக்கே காரை நிறுத்தி மறித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில், 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, சந்தோஷ், தமிழ் குமரன், அஸ்வின் மற்றும் விஷ்வேஸ்வரன் ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவாக இருந்த 3 பேரை தேடிவந்த நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துருவை நேற்று தனிப்படையினர் கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சந்துருவை அதிரடியாக தட்டித்தூக்கிய காவல்துறையினர், ஈசிஆரில் உள்ள விடுதியில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், கைதான சந்துருவை சோழிங்கநல்லூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். அப்போது அவரை பிப்ரவரி 14ஆம் தேதி வரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
காரில் கட்சிக்கொடி – காரணம் இதுதான்! Chanduru gets 15 days in jail!
முன்னதாக கானத்தூரில்நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன், முக்கிய குற்றவாளி சந்துரு கைது குறித்து கூறுகையில், “சந்துரு மீது ஏற்கனவே ஆள்கடத்தல் மற்றும் பணமோசடி ஆகிய 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
சந்துரு, கன்னியாகுமரியைச் சேர்ந்த அனிஷ் என்பவருக்கு சொந்தமான காரை வாங்கி ஓட்டி வந்துள்ளார். 2019ஆம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். தற்போது பெரிதாக எந்த வேலையும் அவர் செய்யவில்லை.
சம்பவத்தன்று சந்துரு, கைது செய்யப்பட்ட சந்தோஷ் உள்ளிட்டோர் 2 கார்களில் ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியை சுற்றி பார்க்க வந்துள்ளனர். அவர்களிடம் வேறு எந்த நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை.
சந்தோஷ் கூறியதன் பேரில் சந்துரு தனது காரில் கட்சிக்கொடி கட்டியுள்ளார். டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக இது போன்று செய்வோம் என விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரில் 5 பேர் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கின்றனர். ஒருவர் வெளி மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கிறார்.
இந்த சம்பவத்தையடுத்து வழக்குப் பதிவில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. இந்த வழக்கில் காவல்துறை நடுநிலைமையுடன், நேர்மையுடன் விசாரணை செய்கிறது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்போது, இந்த வழக்கில் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முட்டுக்காடு பகுதியில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. காவல்துறையினரின் ரோந்து பணி மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளது” என துணை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.