“தங்கை கல்யாணத்துக்கு கூட வரல” : வீரமுத்துவேலின் தந்தை நெகிழ்ச்சி பேட்டி!

தமிழகம்

சந்திரயான் 3 விண்கலம், 2023 ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

இதனை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமானவர் இஸ்ரோவில் சயிண்டிஃபிக் இன்ஜினியராக பணியாற்றும் வீரமுத்துவேல்.

சந்திரயான் 2 திட்டத்தில் இவர் இணை இயக்குநராக பணியாற்றினார். அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. எனினும் விடாமுயற்சியுடன் அந்த திட்டம் தோல்வி அடைந்த 2019ஆம் ஆண்டே சந்திரயான் 3 திட்டத்தை இஸ்ரோ தொடங்கியது.

சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார் வீரமுத்துவேல், தற்போது அவரது வழிகாட்டுதலில் ஏவப்பட்ட சந்திரயான் 3 நிலவில் கால் பதித்து ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளது.

இப்படி ஒரு வரலாற்று சாதனையை படைத்த வீரமுத்துவேல் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்.

வீரமுத்துவேல் தற்போது இஸ்ரோவில் ரோவரின் ஆய்வு பணிகளை மேற்கொண்டிருக்கும் நிலையில், அவரது தந்தை பழனிவேலை சந்திக்க நாம் விழுப்புரம், காந்தி சிலை அருகில் உள்ள வ.உ.சி நகருக்குச் சென்றோம்.

அவரது இல்லத்தில் அரசியல் கட்சியினர், போலீசார், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் குவிந்திருந்தனர்.

பழனிவேலிடம் பலரும் வாழ்த்து சொல்லி பாராட்டிக் கொண்டிருந்தனர். காலை 10.30 மணியளவில்  விழுப்புரம் ஆட்சியர் பழனி, தாசில்தாரை அனுப்பி வைத்து பழனிவேலை அழைத்துவரச் சொன்னார்.

ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பழனிவேலுவுக்கு பொன்னாடை போர்த்தி, புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்  ஆட்சியர் பழனி.மீண்டும் தாசில்தார் வாகனத்தில் பழனிவேலை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

அதன்பின் நாம் பழனிவேலைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பேசினோம்.உங்கள் மகனை எப்போது சந்தித்தீர்கள்? என்று கேட்டோம்.

“எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனது இளைய மகள் காயத்ரி திருமணம் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக பத்திரிகை வைக்க பெங்களூருவில் உள்ள வீரமுத்துவேலின் வீட்டுக்குச் சென்றோம்.
பத்திரிகையை வீட்டில் இருந்த மருமகளிடம் கொடுத்துவிட்டு, போனில் வீரமுத்துவிடம் பேசினோம். அங்கு உனக்கு அதிக வேலை இருக்கும். கல்யாண வேலை எல்லாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம். உன் வேலையில் மட்டும் கவனம் செலுத்து, உன் வாழ்த்து மட்டும் இருந்தால் போதும் என்று பேசிவிட்டு வீடு திரும்பினோம்.
20ஆம் தேதி திருமணத்தன்று  வாழ்த்து வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வாழ்த்து கூட வரவில்லை. விண்கலம் ஏவுவதற்கான பணியில் அவர் பிசியாக இருந்தார். இதை நாங்களும் புரிந்துகொண்டோம். கடைசியாக மகனிடம் 15 நாட்களுக்கு முன்னதாக பேசினேன். எங்களை பற்றி சிந்திக்க கூட நேரமில்லாத அளவுக்கு தேசப் பற்றுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களுக்கு இதுவே சந்தோஷமாக இருக்கிறது. இன்று நாடே அவரை பாராட்டுகிறது. இதைவிட வேறு என்ன வேண்டும்” என்றார்.
பெயருக்கு ஏற்றார் போல் செயல்படுகிறாரே, மகனுக்கு வீரமுத்துவேல் என்று பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டோம்.

“எனது தந்தை பெயர் பச்சையப்பா. அவர் வைத்த பேர் வீரமுத்து. அதற்கு பின்னால் நான் வேலு சேர்த்து வீரமுத்துவேல் என்று வைத்தேன்.

பள்ளிப் பருவத்தில் எனது மகன் சரியான விளையாட்டு பையன். பி.இ., முடித்து எம்.இ., படிக்கும் போது பேசுவதை குறைத்துக்கொண்டு எதையோ சிந்தித்துகொண்டே இருப்பான்,  இன்று இவ்வளவு பெரிய உச்சத்துக்கு வர காரணம் அவரது தேடுதலும் விடாமுயற்சியும் தான்” என கூறினார் பழனிவேல்.

மேலும் அவர், “எனது மகன் இஸ்ரோவில், சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றுகிறார் என எனது நண்பர்களிடமும், சில அறிஞர்களிடமும் கூறியிருக்கிறேன். அப்போது அவர்களது ரியாக்‌ஷன் பெரியதாக இல்லை.

ஆனால் நான் வீரமுத்துவேல் நிச்சயம் சாதிப்பான் என்று பெருமையுடனே இருந்து வந்தேன். அதன்படி இன்று நாடே அவரை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சொல்ல முடியாத சந்தோஷத்தில் இருக்கிறேன்” என்று மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

தனது தங்கை திருமண நாளான ஆகஸ்ட் 20ஆம் தேதி, வீரமுத்துவேலின் குழுவினர் சந்திரயான் 3 திட்டத்தின்  மிக முக்கிய பணியான நிலவுக்கு அருகில் விண்கலத்தை செலுத்தும் பணியில்  ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணங்காமுடி, பிரியா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0