விண்வெளி பயணத்தில் இந்தியா வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் நிலவில் கால் பதித்தாலும், தென் துருவத்தில் கால் பதித்ததில்லை. தென் துருவத்தில் கால் பதிப்பது என்பது இந்த நாடுகளுக்கு சவாலாகவே இருந்தது.
ஆனால் அந்த சவாலை சாதனையாக்கியுள்ளது இந்தியா. இன்று உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது இஸ்ரோ. விண்வெளி பயணத்தில் இந்தியா வல்லரசாகியுள்ளது என்று சொல்லலாம்.
உலகமே போற்றும் இந்த சாதனைக்கு உரித்தானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல். நிலவில் இந்தியாவை முத்தமிடவைத்த விஞ்ஞானி வீரமுத்துவேல் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வீரமுத்துவேல் – சந்திராயன் 3 திட்ட இயக்குநர்!
இவருக்கு சொந்த ஊர் விழுப்புரம். 1978ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தை பழனிவேல். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்.
விழுப்புரம் ரயில்வே அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தார் வீரமுத்துவேல்.பள்ளி படிப்பில் சாதாரண மதிப்பெண் பெற்ற மாணவன் வீரமுத்துவேலுவுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவுடன் அடுத்தது என்ன படிக்க வேண்டும் என்று தெரியவில்லை. இவரது குடும்பத்தில் வேறு யாருக்கும் கல்வி பின்னணி இல்லாததால் அடுத்த என்ன படிக்கலாம் என்று வழிகாட்டவும் யாரும் இல்லை.
நண்பர்களுடன் சேர்ந்து மெக்கானிக்கல் டிப்ளமோ சேர்ந்தார். அங்கு இன்ஜினியரிங் ஃபீல்டு மீது ஆர்வம் வந்ததால் ஆர்வமாக படித்த வீரமுத்துவேல் 90 சதவிகித மதிப்பெண் பெற்றார்.
இதனால் மெரிட்டில் அவருக்கு ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதன்பின் திருச்சி REC கல்லூரியில் பொறியியல் முதுகலை பட்டம் பெற்றார். 9.7 சிஜிபிஏ (மதிப்பெண்) பெற்றார். கோவையில் உள்ள லக்ஷ்மி மெசின் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பணியில் சேர்ந்தார்.
அங்கு வேலை செய்து கொண்டிருக்கும்போதே ஏரோஸ்பேஸ் ரிசர்ச் மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட, பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் பிரிவு ரோட்டரி விங் ரிசர்ச் மற்றும் டிசைன் சென்டரில் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
அங்கு பணியாற்றிக்கொண்டிருக்கும் போதே இஸ்ரோவில் வேலை செய்ய வீரமுத்துவேலுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ப்ராஜெக்ட் இன்ஜினியர், ப்ராஜெக்ட் மேனேஜர் என ரிமோட் சென்சிங் மற்றும் அறிவியல் செயற்கைக்கோள்கள் பிரிவுகளில் பணியாற்றியிருக்கிறார்.
அதேசமயம் ஏரோஸ்பேஸ் குறித்த தனது ஆராய்ச்சியையும் கைவிடாத வீரமுத்துவேல், சென்னை ஐஐடியில் பிஎச்.டி சேர்ந்தார். அங்கு ‘vibration and separation of electronic package in satellite’ என்ற தலைப்பில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கட்டுரை பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதிக்கப்பட்டது. அப்போது இந்த கட்டுரை பற்றி விஞ்ஞானிகள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. இது, லேண்டரை நிலவில் தரை இறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்பட்டது.
தொடர்ந்து இஸ்ரோவின் முதல் நானோ செயற்கைகோள் குழுவை வழிநடத்த இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவரது வழிகாட்டுதலில் 3 நானோ செயற்கைகோள்கள் ஏவப்பட்டுள்ளன.
இதையடுத்து சந்திராயன் 2 திட்டத்தின் இணை திட்ட இயக்குனராக பணியாற்றினார். இப்படி ஏறத்தாழ 30 ஆண்டுகளாக இஸ்ரோவில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய வீரமுத்துவேல் 2019ஆம் ஆண்டு சந்திராயன் 3 திட்டத்துக்கான இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அதன்படி சந்திராயன் 3 திட்டத்தில் இவருக்கு கீழ் 29 துணை இயக்குநர்களும், எண்ணற்ற விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் பணியாற்றினர். இந்தசூழலில் இந்த திட்டத்துக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து சந்திரயான் 3 ஜூலை 14ஆம் தேதி விண்ணில் சீறி பாய்ந்தது. விண்ணில் பாய்ந்து 40 ஆவது நாளான நேற்று (ஆகஸ்ட் 23) விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்கியது. தற்போது நிலவில் இருந்து பூமிக்கு புகைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தில் பணியாற்றியது குறித்து முன்னதாக பேசியுள்ள வீரமுத்துவேல், “ எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு மயில்சாமி அண்ணாதுரை சாருக்கு நன்றி. நான் எல்லா சமயத்திலும் படிக்கமாட்டேன். ஆனால் படிக்கும் சமயத்தில் 100 சதவிகிதம் முழு கவனத்துடன் புரிந்துகொண்டு படிப்பேன். நான் ஒரு சாதாரண மனிதன். என்னால் இவ்வளவு தூரம் வரமுடியும் என்றால். எல்லோராலும் முடியும். அதை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது நமது கையில் இருக்கிறது. என்னை பொறுத்தவரை சுய ஒழுக்கம், 100 சதவிகிதம் ஈடுபாடு, எதிர்பார்ப்பு இல்லாதது, தனித்தன்மை ஆகியவை நிச்சயம் வெற்றி கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
நிலவில் லேண்டர் தரையிறங்கிய வெற்றியை கொண்டாடிய வீரமுத்துவேலுவின் தந்தை பழனிவேல் கூறுகையில், “வீட்டுக்கு கூட வராமல் என் மகன் வேலை செய்தார். அவருடைய டீம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த விண்கலத்தை தென் துருவத்தில் தரையிறக்கி உலகில் எந்த நாடும் செய்யாத சாதனையை இந்தியா செய்திருக்கிறது. பிரதமர் இதற்கு மிகவும் முயற்சி எடுத்தார். விடாமுயற்சியுடன் பெயருக்கு ஏற்றாற்போல செயல்பட்ட எனது மகனால் நான் மிகவும் சந்தோசப்படுகிறேன். சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்த திட்டத்துக்கு பொறுப்பேற்றது முதல் வீரமுத்துவேல் வீட்டுக்கு வரவில்லை. குறிப்பாக என்னுடைய மகள் நிச்சயதார்த்தம், கல்யாணத்துக்கு கூட வரவில்லை. கல்யாணத்தை விட பணி தான் முக்கியம் என்று நானும் சொன்னேன். இது மறக்க முடியாத நாள்” என்று பெருமையுடன் கூறினார்.
இந்தியாவின் விண்வெளி சாகசத்தில் புதிய அத்தியாயத்தை அடைய முக்கிய காரணமாக இருந்த திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுவுக்கு மின்னம்பலம் சார்பாக வாழ்த்துக்கள்.