சந்திரபாபு நாயுடு கைது : ஆந்திர-தமிழக பேருந்து சேவை பாதிப்பு!

தமிழகம்

சந்திரபாபு நாயுடு கைதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திரா, தமிழ்நாடு எல்லைகளில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுத் திட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஆந்திரா முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் டயர்களை கொளுத்தி போலீசாருக்கும் மாநில அரசுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலை 6 மணிக்கு சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதும், மாநிலம் முழுவதும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

அதுபோன்று தமிழக ஆந்திர எல்லை மாவட்டங்களான வேலூர் மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் தமிழக, ஆந்திர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
அதுபோல் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு வரும் பேருந்துகளும் அம்மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

40 தமிழக அரசுப் பேருந்துகள். 63 ஆந்திர மாநில அரசு பேருந்துகள். 27 தனியார் பேருந்துகள் என மொத்தம் 130 பேருந்துகள் ஆந்திராவிற்கு இயக்கப்படவில்லை.

வேலூரில் இருந்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.அதுபோன்று மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

எனினும் வழக்கம் போல் பேருந்து சேவைகள் இல்லாததால் ஆந்திரா- தமிழக பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக திருப்பதி சென்றிருக்கும் தமிழ்நாடு பக்தர்கள் பேருந்துகள் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

பிரியா

தனபால் மனநிலை பாதிக்கப்பட்டவர்: கொடநாடு சர்ச்சையில் இளங்கோவன் புகார்!

எதிர்நீச்சல் : மாரிமுத்துவுக்கு பதில் யார்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0