காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி சேதம் அடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று (ஜனவரி 22) தமிழகம் வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள விவசாயிகள், சுமார் 1,70,000 ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி செய்திருந்தனர். இந்த நெற்பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமல்லாமல் நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும், ஊடுபயிராக பயிரிடப்பட்ட உளுந்து, பாசி பயிர்களும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மழை விட்டும் தண்ணீர் வெளியேறாததால் நெற்பயிர்கள் அழுகியதுடன், துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் 17 சதவிகிதம் ஈரப்பதம் இருந்தால் எடுப்பது என்ற வழக்கத்தை மாற்றி 22 சதவிகிதம் வரை உயர்த்தி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட பல்வேறு விவசாய அமைப்புகள் அரசை வலியுறுத்தி வந்தது. இதுகுறித்து தமிழக அரசும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரான உணவு பாதுகாப்பு துறையின் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லி சென்று மத்திய அரசின் உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் கோப்ராவை நேரில் பார்த்தும் நேற்று (ஜனவரி 21) வலியுறுத்தி பேசினார். இதை ஏற்று, இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில் மத்திய அரசின் உணவுத்துறையின் கீழ் உள்ள சேகரிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த உதவி இயக்குநர்கள் நவீன் , டி.எம்.பிரீத்தி மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இந்த குழுவினர் இன்று (ஜனவரி 22) தமிழகம் வந்து நெற்பயிர்களை ஆய்வு செய்வதுடன் நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் சென்று பார்வையிடுவார்கள் என தெரிகிறது.
பின்னர் அது தொடர்பான அறிக்கையை மத்திய அரசின் உணவு அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இந்த அறிக்கையின் அடிப்படையில் 22 சதவிகித ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.