ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்புப் படையினர் இன்று வருகை தந்துள்ளனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
உடற்பயிற்சி செய்வது, பரோட்டா சுடுவது, துணி தேய்த்துக் கொடுப்பது, டீ போடுவது, மேள தாளம் இசைப்பது என மக்களைக் கவரும் வண்ணம் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் முரசு சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவனீதன் கரும்பு விவசாயி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
அமமுகவுக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் தேர்தலில் இருந்து விலகியது. அந்த சின்னத்தை சுயேட்சையாக போட்டியிட்ட 4 பேர் கேட்டிருந்த நிலையில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கே.பி.எம்.ராஜாவுக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னம் விஸ்வபாரதி மக்கள் கட்சியின் வேட்பாளர் வேலுமணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனவே நோட்டாவுடன் சேர்த்து 78 பேர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியுள்ளது.
எனவே ஒரு இயந்திரத்துக்கு 16 வேட்பாளர்கள் சின்னம் பொருத்தப்பட்டு மொத்தம் ஒரு பூத்துக்கு 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் ஈரோட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்புப் படை என மொத்தம் 180 வீரர்கள் வந்துள்ளனர். தொடர்ந்து இந்தோ- திபெத்திய பாதுகாப்புப் படை வீரர்களும் வரவுள்ளனர்.
பிரியா