case on 8 officers in tamilnadu

குட்கா முறைகேடு: 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி!

தமிழகம்

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர சிபிஐக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 11) கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் சோதனை செய்தனர். இந்த வழக்கில் அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். தொடர்ந்து சிபிஐ ஜாமீனில் வெளியே வந்த 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19-ம் தேதி அனுமதி வழங்கியது.

இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர்களும் இடம்பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து 11 பேருக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு தவறுகள் இருப்பதால் திருத்தம் செய்து முழுமையான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணை அதிகாரிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் தமிழக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளிப்பதில் தாமதமானதால் இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, குட்கா வழக்கில் 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளித்ததற்கான கடிதத்தை மூடி முத்திரையிட்ட உறையில் சிபிஐ தாக்கல் செய்தது.

அதனை பெற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மோனிஷா

டிடிவி தினகரன் திவாலானவர்: வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

அதிகரித்த கடன்… விமர்சித்த நிர்மலா சீதாராமன்: பிடிஆர் கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *