மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு நிதி அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இன்னும் சென்னையில் பல்வேறு இடங்களில் நீர் வடியாததால் மக்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.5060 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டிசம்பர் 6ஆம் தேதி கோரிக்கை வைத்தார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.
இன்று (டிசம்பர் 7) சென்னை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மழை பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட அறிவிப்பில், “மிக்ஜாம் புயல் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2ஆவது தவணையாக ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியும், தமிழகத்துக்கு ரூ.450 கோடியும் மத்தியப் பங்காக முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார்.
இரு மாநிலங்களுக்கு இதே தொகையின் முதல் தவணையை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், “கடந்த 8 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இதுபோன்ற வெள்ள பாதிப்பைச் சென்னை சந்தித்துள்ளது. பெருநகரங்களில் கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை நாம் அதிகம் பார்க்கிறோம்.
எனவே, தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்துக்கு ரூ. 561.29 கோடி ஒதுக்கீடு செய்யப் பிரதமர் மோடி உத்தரவிட்டதையடுத்து, அந்த நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சென்னையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க உதவும்” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மழை பாதிப்பு: ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த ராஜ் நாத் சிங்… முதல்வருடன் ஆலோசனை!
வெள்ளத்தில் கலந்த எண்ணெய் கழிவு.. ஆபத்தில் பொதுமக்கள்: காப்பாற்றுமா அரசு?