பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) உறுப்பினர்களாக தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஆஷிஷ் குமார் சவுகான் மற்றும் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோரை நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
1956 ஆம் ஆண்டின் யுஜிசி விதிப்படி, பல்கலைக்கழக மானியக் குழுவில் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தவிர, பத்து உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
தற்போது, உயர்கல்வி செயலாளர் சஞ்சய் மூர்த்தி மற்றும் நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் கூடுதல் செயலாளர் சஞ்சய் பிரசாத் மற்றும் மமிதாலா ஜகதேஷ் குமார் மற்றும் தீபக் குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில் தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநரும், அலகாபாத் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆஷிஷ் குமார் சவுகான், ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ,
தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கழகத்தின் துணைவேந்தர் சசிகலா குலாப்ராவ் வஞ்சாரி, ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சச்சிதானந்த மொஹந்தி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார்கள்.
தற்போது யுஜிசி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
1968ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார்.
சென்னை ஐஐடியில் பொறியியல் பட்டம் படித்த பின்னர், 1989-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று பிரின்ஸ்டனில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
2009-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜோஹோ மென்பொருள் நிறுவனத்தை ஸ்ரீதர் வேம்பு துவங்கினார். இது கிளவுட் சார்ந்த வணிக மென்பொருள் நிறுவனமாகும்.
இவர், இந்திய அரசு வழங்கும் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2021ஆம் ஆண்டு பெற்றார்.
‘இந்தியா’ என்ற பெயருக்கு பதிலாக ‘பாரத்’ என்று மறுபெயரிடும் பாஜக அரசின் முடிவை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சிறுத்தை நடமாட்டம்: அரியலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
சிவகங்கை: காங்கிரசுக்குள் எதிர்ப்பு, அதிமுகவின் வேகம்… கார்த்தியை கரையேற்றும் அமைச்சர்கள்!