மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையின் வலது கரையில் மத்திய அதிவிரைவு படையினர் நேற்று ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் பதற்றம், கலவரம் ஏற்படும் பகுதிகள், எந்தெந்த காரணங்களுக்காக ஏற்படுகிறது என்பது குறித்து மாவட்டம் வாரியாக மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றங்கள், எவ்வாறு கையாளப்படுகிறது குறித்தும் காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வு செய்தும், ஆவணங்களைப் பார்த்து வருகின்றனர்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் இருந்து கமாண்டர் சுஜித்குமார் தலைமையில் உதவி கமாண்டர் பிஜீ ராம், சதிஷ், ஆய்வாளர்கள் சுப்பையன் கோபி, சைலஜா என 35 பேர் அடங்கிய குழுவினர் மாவட்டத்தில் ஆய்வு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் ஆறு உட்கோட்டங்களில் உள்ளன. ஒவ்வொரு உட்கோட்டங்கள் வாரியாக மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய அதிவிரைவு படையினர், மேட்டூர் உட்கோட்டத்திற்குட்பட்ட மேச்சேரி, கருமலைக்கூடல், மேட்டூர், கொளத்தூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, எந்தெந்த இடங்கள் பதற்றமானவை, கலவரம் ஏற்படுவதற்கு காரணங்கள் குறித்தும், தற்போது உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது, அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் செல்லும்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். இதனால் காவிரி நீர் செல்லும் பகுதியில் உள்ள கிராமங்கள், மக்களின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர், மேட்டூர் அணையின் வலது கரையில் மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு குறித்து பேசியுள்ள மத்திய அதிவிரைவு படை அதிகாரி ஒருவர்,
”மாவட்டத்தில் பதற்றமான இடங்கள், மதக்கலவரம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும், பேரிடர் பாதிப்பு ஏற்படும் இடங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில், இதுபோன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய அதிவிரைவு படையினர் தேவையின்போது, எந்த சாலை மார்க்கமாக கலவரம் ஏற்படும் பகுதிக்கு வருவது, கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த ஆய்வு பணி முடிந்த பிறகான அறிக்கையை உயரதிகாரிகளுக்கு சமர்ப்பிப்போம்” என்று ஆய்வுக்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
ராஜ்
மக்கள் தொகையை அதிகரிக்க சீன அரசின் புதிய திட்டம்!
திருப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்