மணிவிழா காணும் காஞ்சீவர பாணி ! 

சிறப்புக் கட்டுரை தமிழகம்

ஸ்ரீராம் சர்மா

பரந்து விரிந்த உலகில் எத்துனையோ நடனக்கலை வகைகள் உண்டு.

ஆனால், வரையறுக்கப்பட்ட இலக்கணம் கொண்ட ஒரே நடன வகை பரத நாட்டியம் மட்டுமே ! 

பரதமுனிவரால் 6000 ஸ்லோகங்கள் கொண்டு சமைக்கப்பட்ட அந்த பரத சாஸ்திரம்  முழுமையாக நிலை நிறுத்தபட்டது நமது தமிழகத்தில்தான் !

ஆம், பரதக் கலை காத்த பெருமை தமிழ் மண்ணுக்கே உரியது ! அதனால்தான் பரதநாட்டியம் என்பது தமிழகத்தின் குறியீடாகிப் போனது. 

புகழுடைய பரத நாட்டியத்தில் பலவிதமான பாணிகள் உண்டு. 

பந்தநல்லூர் பாணி– வழுவூர் பாணி– தஞ்சாவூர் பாணி எனத் தொடரும் அதில் காஞ்சீவரம் பாணி என்பது குறிப்பிடத்தக்கது. 

காஞ்சீவரம் பாணி எனுமந்த அரும்பெரும் பாணி, “பரத சாஸ்த்திர ரத்னா” காஞ்சீவரம் எல்லப்ப முதலியார் எனும் மகா மேதையால் தோற்றுவிக்கப்பட்ட – நூற்றாண்டுக்காலம் கண்ட தனித்த பாணியாகும். 

காஞ்சீவரம் எல்லப்ப நட்டுவனாரின் அந்தப் பாணியை அவரது குருகுல சிஷ்யராக அமைந்து நின்று அரும்பாடுபட்டுக் கடத்தியவர் காலம் சென்ற மரியாதைக்குரிய நடன மேதை உடுப்பி ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஆச்சார்யா அவர்கள். 

அவரால் 1962ல் தோற்றுவிக்கப்பட்ட பரத நாட்டிய பள்ளியான நாட்டிய மஞ்சரி தன் 60 ஆவது ஆண்டு விழாவை – கலைக்காவலர் நல்லி குப்புசாமி அவர்களும், பரதக் கலைஞர்களின் கூட்டமைப்பாம் ABHAI அதன் தலைவரான நாட்டிய சூடாமணி ரோஜா கண்ணன் அவர்களும் தலைமையேற்று வாழ்த்த இனிதே கொண்டாடுகின்றது. 

பரதக் கலையை நிறுவனமயமாக்கி பகட்டு மேலிட அதன் ஆன்மாவை சிதைத்தலையும் ஒருசில அழிச்சாட்டியங்களும் இங்கே உள்ளனதான் என்றாலும்… பரத நாட்டியத்தை அதன் தூய வழி நின்று ஆத்ம சுத்தியோடு கடத்திக் கொண்டிருக்கும் நல்லோர்களும் இங்குண்டு. 

அதிலொன்றே நாட்டிய மஞ்சரி !

centenary old Kanchipuram style baratha natiyam style

அதன் மணிவிழாவை மனதார வாழ்த்துவது எனது கடமையாகிறது. காரணம், உண்டு. அது நாட்டியத்துக்கான தொண்டு.

குரு ஸ்ரீ  உடுப்பி லக்ஷ்மி நாராயண் ஆச்சார்யா

பரத நாட்டியம் என்பது இருகூறுகளைக் கொண்டது.

ஒன்று ‘லாஸ்யம்’. மற்றொன்று ‘தாண்டவம்’. 

லாஸ்யத்தை ‘சுகுமாரம்’ என்ற சொல்லாலும் – தாண்டவத்தை ‘உத்ததம்’ என்ற சொல்லாலும் குறிக்கிறார் பரத முனிவர். 

இரண்டையும் தமிழ்ப்படுத்தி ‘குழைந்தாடல்’ எனவும் ‘நிமிர்த்தாடல்’ எனக் கொள்ளலாம். 

குழைந்தாடல் என்னும் லாஸ்யம் பெண்களுக்குரியது எனில், நிமிர்த்தாடல் எனும் தாண்டவம் ஆண்களுக்குரியதாகும் என்கிறார் பரதமுனிவர் ! 

இரண்டையும் மெல்லக் கலந்து வெளிப்படுத்தலாம் எனினும், அதன் கூட்டுக் கலவையால் ரஸம் குறைந்து விடலாகாது என உன்னித்து வலியுறுத்தி வைத்திருக்கின்றது பரத சாஸ்த்திரம். 

அந்த நுணுக்கத்தை உள்ளார்ந்து அவதானித்து, ஆணுக்குரிய கம்பீரத்தோடும் நடனத்தின் ரஸம் குறைந்து விடாமலும் ஆட வல்லவராக மட்டுமல்ல – ஆட்டுவிப்பவராகவும் விளங்கிய ஈடு இணையற்ற குருநாதரே உடுப்பி ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் ஆச்சார்யா !  

ஒன்றிணைந்த திராவிடப் பொன்னாட்டின் ஒரு கூறாகி இருந்த அன்றைய கன்னட தேசத்தில் பிறந்த அந்த வெள்ளந்தி மனிதர் பரதக் கலை கற்கும் வேட்கையோடு தமிழகம் வந்து பட்டபாடு பெரும்பாடு. 

பரதமே எனது மூச்சு என விடாது முயன்றவரை, “வா, மகனே நானிருக்கிறேன் உனக்கு..” என ஆர அரவணைத்துக் கொண்டது காஞ்சீவரம் எல்லப்ப முதலியார் அவர்களின் பேரன்புக் கரம் !

எல்லப்ப நட்டுவனாரின் மாட்சியைக் குறித்து தனிக் கட்டுரையே எழுதலாம், எழுதுவேன். 

தமிழக வரலாற்றில் பரத நாட்டியத்துக்கான தொழிற் முறைத் தேர்வை எழுதி வென்ற முதல் ஆண் பரதக் கலைஞர் எல்லப்ப நட்டுவனாரின் சீடரான உடுப்பி லக்ஷ்மி நாராயண் ஆச்சார்யா அவர்களே ! 

மேலும், பரத நாட்டிய உலகில் ‘புஷ்பாஞ்சலி’ என்பதை அறிமுகப்படுத்தியவர் உடுப்பி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஆச்சார்யா அவர்கள்தான். அன்றைய பரத நாட்டிய நிகழ்வுகள் ஆதியில் ‘அலாரிப்பு’ கொண்டே துவங்கப்பட்டு வந்தது. அவரது வழி காட்டுதலுக்குப் பின்பே புஷ்பாஞ்சலி வழக்கமானது. 

centenary old Kanchipuram style baratha natiyam style

எல்லப்ப  நட்டுவனாருக்கு எனது தந்தையார் வேணுகோபால சர்மா நெருங்கிய நண்பர் என்பதால் உடுப்பி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஆச்சார்யா அவர்களும் அந்த வட்டத்தில் இணைந்தார். 

இந்திய – சீன போர் உட்பட சில அவசியத் தருணங்களில் சமூக நாட்டிய நாடகங்களை எனது தந்தையார் ஓவியப் பெருந்தகை வேணுகோபால் சர்மா அவர்கள் எழுதிக் கொடுக்க – அத்தனை நாட்டிய நாடகங்களையும் தனது நாட்டியக் குழுவோடு  நாடெங்கும் சென்று நிகழ்த்தி சமூகப் பணியாற்றினார் உடுப்பி ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஆச்சார்யா அவர்கள். 

வேணுகோபால் சர்மா அவர்கள் வடிவமைத்த பரத நாட்டியத்துக்கான ஒரு சில வர்ணங்கள், பதங்களை தன் நடன விற்பன்னத்தால் அரங்கேற்றி அழியாப்புகழ் படைத்தார்.  

குரு உடுப்பி ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஆச்சார்யா அவர்களின் பரத சீடர்களான பிரபுதேவா சகோதரர்களின் அரங்கேற்றத்தில் ஓயாத கரகோஷங்களோடு நிகழ்ந்த ‘ஆடும் மயில்மீது உறவாடும்..’ என்னும் பதம் குறிப்பிடத்தக்கது !  

1970 மாடல் பஜாஜ் ஸ்கூட்டரில் தான் எங்கள் வீட்டுக்கு வருகை தருவார் மாஸ்டர். ஆம், மாஸ்டர் என்றுதான் அவரை மரியாதையோடு  நாங்கள் அழைப்போம்.  

மாஸ்டரின் ஸ்கூட்டர் வீட்டு வாசலில் வந்து நிற்பது அன்றைய ஆளரவமற்ற நித்சலமான திருவல்லிக்கேணி பெசன்ட் ரோட்டில் பெரிதாக ஒலித்து அடங்கும். வீட்டு வராண்டாவைத் தாண்டி உள்வரும் அவரை மெல்லக் கடக்கும் சிறுவன் என்னை புன்சிரிப்போடு தலைகோதிச் செல்வார் மாஸ்டர். 

அடடா, சாமவேதம் கற்றுத் தெளிந்த அவரது தேஜசான முகமும் – தீட்சண்யம் பொருந்திய அவரது பார்வையும் மனதைக் கொள்ளை கொள்ளும். 

அதன்பிறகு வீடே அமைதியாக இருக்கும். அப்பாவும் அவரும் அவர்கள் இருவருக்கும் மட்டுமே கேட்கும் மெல்லிய ஓசையில் அது துளு மொழியோ கொங்கணியோ ஏதோவொன்றில் ஓயாமல் உற்சாகமாய்க் பேசிக் கலைவார்கள். நாங்கள் உறங்கிப் போயிருப்போம். 

centenary old Kanchipuram style baratha natiyam style

நானும்  மாஸ்டரும் !

எனது தந்தையார் மறைந்து இரண்டாண்டுகளுக்குள் ஆன்மீக பாடலுலகில் வயதுக்கு மீறிய புகழ் கிடைத்துவிட்டிருந்தது எனக்கு. கில்லி கோலி காத்தாடி என சுற்றித் திரிந்த அதே தெருவில் மாலையும் மரியாதையும் கிடைக்க – கூச்சத்தோடு தலைகவிழ்ந்தபடி மெல்ல வீடேறிக் கொண்டிருப்பவனாக இருந்தேன்.

ஓர் நாள் என்னை வீட்டு ஃபோனில் அழைத்தார் மாஸ்டர்.   

“என்னப்பா, ரொம்ப பிஸியா இருக்க போலருக்கே…?” 

“எல்லாம் உங்க ஆசீர்வாதம் மாஸ்டர்.” 

“ம்ம்ம். சாயங்காலம் வீட்டுக்கு வா..”

வடபழனிக்கு விரைந்து சென்று நின்றேன். 

கேளப்பா… உன் அப்பா இருந்த வரைக்கும் அவர் எனக்கு எழுதிக் கொடுத்தார். இப்போ என் பொண்ணு மதுமதி குருவாக இருந்து ஒரு டான்ஸ் ட்ராமா பண்ணப் போறா… நீ எழுதிக் குடுத்தா நல்லா இருக்கும்… செய்வியா ?

உத்தரவு மாஸ்டர் ! 

எப்ப எழுதித் தருவே ?

இப்பவே மாஸ்டர் !

அந்த மாடி அறையில் அமர்ந்தபடி சூழலை அவர் சொல்லச் சொல்ல – வெவ்வேறு சந்தங்களில் விறுவிறுவென எழுதி முடித்தேன். “பரவாயில்லையே…குட்…வெரிகுட்..” என ஆனந்தமாக தட்டிக் கொடுத்தனுப்பினார். 

அந்த நாட்டிய நாடகத்துக்கு மகாகவி பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி அவர்கள் இசையமைத்தார். அரங்கேற்ற மேடைக்கு சிறுவன் என்னை அழைத்து உச்சி முகர்ந்து கௌரவித்து ஆசீர்வதித்து அனுப்பினார் மாஸ்டர். 

இன்றும் அதனை நிகழ்த்தி வருகிறார் அவரது பரத வாரிசான குருமகள் மதுமதி பிரகாஷ் 

மதுமதி பிரகாஷ்

எல்லப்ப நட்டுவனாரின் காஞ்சீவரம் பாணியை கொண்டு செலுத்தும் நாட்டிய மஞ்சரிக்கு தலைமை ஏற்று திறம்பட செயலாற்றி வருகிறார் மதுமதி பிரகாஷ் அவர்கள் !

குருநாதர் எல்லப்ப முதலியார் அவதரித்த காஞ்சீவரத்தொட்டிய கிராமத்து மண்ணில் நாட்டியப் பள்ளி ஒன்றைத் தோற்றுவித்து – வாரம் தோறும் அங்கே காரில் பயணித்துச் சென்று – எளிய பிள்ளைகளிடம் பரதக் கலை வளர்த்து  நன்றி போற்றி வரும் அந்தக் குருமகளை… 

எனது ‘அக்காள்’ என அழைத்துக் கொண்டாடுவதில் எனதெளிய மனம் நெகிழ்கிறது ! புகழ் படைத்த பிரபுதேவா அவர்களும் குருமுகம் போற்றி அவ்வாறே வணங்கி நிற்பது சிறப்பு !

முன்னோர்களால் அரும்பாடுபட்டு நூர்த்து வைக்கப்பட்ட கலை வடிவங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது பெருங்கடமையாகும். அதனை விழைந்து செய்யும் மதுமதி பிரகாஷ் அவர்களை எளிய படைப்பாளனாக நின்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.    

கணவனை இழந்த பின்னும் தன்னிலை இழக்காமல் கடமை தவறாது இன்முகத்தோடு பரதக் கலையினை எளியோருக்கும் பகிர்ந்தளிக்கும் மதுமதி பிரகாஷ் அவர்களை வெல்லப் பிறந்த வேலுநாச்சியார் வடிவமாகவே காண்கிறேன்.  

குரு எல்லப்ப நட்டுவனார் – குரு லக்ஷ்மி நாராயண ஆச்சாரியா பரம்பரை வழியில் உயர்ந்த பரதக் கலையினை விடாமல் தொடர்ந்தேற்றும் நாட்டிய மஞ்சரியின் மணிவிழா பொலிந்து சிறக்கட்டும் !

தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ !

கட்டுரையாளர் குறிப்பு

sriram sharma

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

மறுதலிக்கப்படுமாம் தற்கொலைகள் ! வே.ஸ்ரீராம் சர்மா

எனதருமை மாணவச் செல்வங்களே!வே.ஸ்ரீராம் சர்மா

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.