கோவில்களில் செல்போனுக்கு தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Monisha

கோவில்களில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவில் அர்ச்சகர் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தமிழகத்தில் பிரபலமான கோவில்கள் நிறைய உள்ளன. அங்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பயன்படுத்தி கோவிலில் உள்ள சிலைகளைப் புகைப்படம் எடுக்கின்றனர்.

இதனால் சிலை திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே கோவிலுக்குள் வரும் பக்தர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே நவம்பர் 9 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த விசாரணையில் நீதிபதிகள், திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தடை விதிக்க வேண்டும் என்றும் இது தொடர்பான நகலை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று (டிசம்பர் 2) மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்செந்தூர் கோவிலில் செல்போன் தடை செய்யப்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது நீதிபதிகள் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

திருச்செந்தூர் கோவிலில் செல்போன் தடை செய்யப்பட்டது மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்.

மேலும், தமிழகத்தில் உள்ள கோவில்கள் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக உள்ளன. எனவே கோவிலுக்குள் ஆடை கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மோனிஷா

நீதிபதிகளுக்கே மிரட்டலா? – பாஜக நிர்வாகியை எச்சரித்த நீதிமன்றம்!

உதவிப் பேராசிரியர் நியமனம்: அறிவிப்பாணை ரத்து!