திருச்செந்தூர் கோயிலில் செல்போனுக்கு தடை: அதிரடி உத்தரவு!

Published On:

| By Monisha

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் அர்ச்சகர் உட்பட அனைவருக்கும் செல்போன் எடுத்து செல்ல தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (நவம்பர் 9) உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுநல மனு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றக் கூடிய சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் ”கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும்.

கோயில் சிலைகளைப் புகைப்படம் எடுப்பதுதான் சிலை திருட்டுக்குக் காரணமாக அமைகிறது. சில கோயில்களில் புகைப்படம் எடுப்பதன் மூலம் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. ஆகையால் திருச்செந்தூர் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சாமி முன்பு செல்ஃபி

இந்த மனு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு இன்று (நவம்பர் 9) விசாரணைக்கு வந்தது

வழக்கை விசாரித்த நீதிபதிகள் “கோயிலுக்கு வரும் பக்தர்கள் நாகரிகமான உடை அணிந்து வருவது கிடையாது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கோயில்கள் என்பது சுற்றுலா தலம் கிடையாது. அது மக்களின் பக்தியை வெளிப்படுத்தக் கூடிய ஒரு இடமாக இருக்கிறது.

கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்களது செல்போனில் சாமி முன்பு நின்று செல்ஃபி எடுத்து அதனை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களே தாங்கள் பூஜை செய்வதை வீடியோவாக எடுத்து யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இது ஏற்கத்தக்க விஷயம் கிடையாது. தமிழகத்தில் உள்ள கோயில்கள் சத்திரமாக இருக்கிறது. அங்கு யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும்.

உடனடியாக அமல்படுத்த வேண்டும்

திருப்பதி தேவஸ்தான வாசல்களில் கூட செல்போன் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. அந்த நிலை தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

எனவே திருச்செந்தூர் கோயிலில் உடனடியாக செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதித்து, கோவிலுக்குள் அர்ச்சகர் உட்பட யாருமே செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

கோயிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல கூடாது என்ற உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

குறிப்பாகக் கோயிலுக்கு முன்பாக சோதனை சாவடி அமைத்து செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் செல்போன்களை திரும்ப ஒப்படைக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

மோனிஷா

சென்னை டூ கொல்கத்தா: தடம் புரண்ட ரயில்!

T20 WorldCup: இறுதிகட்டத்தில் உலகக்கோப்பை… மழை வந்தால் வெற்றி யாருக்கு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel