ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை சென்னை காவல்துறை இன்று (அக்டோபர் 27) வெளியிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் ஒன்றாம் எண் கேட் முன்பு ரவுடி கருக்கா வினோத் கடந்த 25 ஆம் தேதி மாலை பெட்ரோல் குண்டு வீசினார். ஆளுநர் மாளிகை முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கருக்கா வினோத்தை பிடித்து கிண்டி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளி தப்பித்து விட்டார் என்று ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. அதில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்” என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஆளுநர் மாளிகை சார்பில் மூன்று பக்க புகார் அளிக்கப்பட்டது. அதில், ’தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து வார்த்தை ரீதியாகவும், செயல் ரீதியாகவும் தாக்குல்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆளுநர் அச்சுறுத்தப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆளுநர் மாளிகையின் புகாருக்கு ஏற்கனவே தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் மறுப்பு தெரிவித்திருந்தார்.
https://twitter.com/BalanLoganathan/status/1717826138469532012
இந்நிலையில் ரவுடி கருக்கா வினோத் தேனாம்பேட்டையில் இருந்து நடந்து வந்து ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சிசிடிவி காட்சிகளை சென்னை பெருநகர காவல்துறை இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிசிடிவி காட்சிகளை காண்பித்த பிறகு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ”25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில் குற்றவாளி கருக்கா வினோத் (42) தேனாம்பேட்டையில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி தனியாக நடந்து வந்துள்ளார் என்பது சிசிடிவி காட்சிகள் மூலமாக தெரிகிறது. குற்றவாளி ஆளுநர் மாளிகையின் மெயின் கேட் வழியாக உள்ளே நுழைய முயற்சிக்கவில்லை.
கருக்கா வினோத், தான் கொண்டு வந்த 4 பெட்ரோல் வெடிகுண்டுகளில் 2 வெடிகுண்டுகளை கையில் எடுத்து சர்தார் வல்லபாய் படேல் சாலையின் எதிரே இருந்து எறிய முற்பட்ட போது அவை ஆளுநர் மாளிகைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த தடுப்பு முன் விழுந்தன. பெட்ரோல் வெடிகுண்டு ஆளுநர் மாளிகைக்குள் வீசப்படவில்லை. குற்றவாளியும் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து செல்லவில்லை. குற்றவாளி ஆளுநர் மாளிகை ஊழியர்களால் பிடிக்கப்படவில்லை.
சென்னை பெருநகர காவல்துறையை சேர்ந்த 5 காவல் அதிகாரிகளால் குற்றவாளி பிடிக்கப்பட்டு கிண்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். இது தான் அன்றைய தினம் நடந்தது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஆளுநர் மாளிகையின் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் இதுகுறித்து விளக்கம் அளித்தார்.
“’மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுர ஆதினம் நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த போது கம்பு மற்றும் கற்களால் தாக்கப்பட்டார் என்று ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஆளுநர் மாளிகை புகார் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த சம்பவம் ஏப்ரல் 19 ஆம் தேதி காலையில் நடந்தது. அதுவும் ஆளுநர் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. ஆளுநரின் கான்வாயில் மொத்தம் 14 வண்டிகள். ஆளுநரின் வண்டி நெருங்க நெருங்க போலீஸ் பெரிய அளவில் பாதுகாப்பு கொடுக்கிறது. ஆளுநர் கான்வாய் முடிந்து அதன் பின்னால் வந்த ஒரு பிரைவேட் வாகனத்தில் ஒரு கறுப்புக் கொடி மேல் இருந்து வந்து விழுகிறது. இதுதான் நடந்த சம்பவம். இதில் ஆளுநர் கம்புகள், கற்களால் தாக்கப்பட்டதாக சொல்வது தவறான செய்தி.
இந்த சம்பவத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி வி.ஏ.ஓ. விடம் புகார் வாங்கி, மாலையே எஃப்ஐஆர் போடப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதுவரை 53 சாட்சிகளிடம் விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். எஃப்ஐஆர் நகலும் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டிஜிபி சங்கர் ஜிவால், “தமிழ்நாடு ஒரு பாதுகாப்பான இடம். தற்போது இந்தியாவில் உள்ள் மாநகரங்களில் பாதுகாப்பான இடம் சென்னை என்று ஆய்வு அறிக்கை சொல்கிறது. சென்னையை பாதுகாப்பான இடமாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருள் கடத்தல் குற்றங்கள், ரவுடிகள் தொந்தரவுகள் என அனைத்திலும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சாதாரண பொதுமக்களில் இருந்து உயர் அதிகாரிகள் வரை எல்லோருக்கும் தமிழ்நாடு அரசு சார்பாக, காவல்துறை சார்பாக உரிய பாதுகாப்பு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
உங்களுக்கு 17 வயசு ஆயிடுச்சா? வாக்காளர் பட்டியல்ல சேர இதைச் செய்ங்க!
Comments are closed.