அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் சிபிசிஐடி மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளது.
நெல்லை ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கை விசாரிக்க அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த மாதம் (ஏப்ரல்) 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணைக்குப் பிறகு அமுதா ஐஏஎஸ் உயர்மட்ட விசாரணைக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை தற்போது ஆய்வாளர் உலகராணி தலைமையில் சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் 17 வயது சிறாரின் பற்கள் பிடுங்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சீங் மீது சிபிசிஐடி ஏடிஎஸ்பி சங்கர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளார்.
மேலும் பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கணேசன், அருண்குமார், 2 சிறார்கள், ராசு, மகேந்திரன், சாம் ஆகிய 7 பேர் வரும் மே 5 ஆம் தேதி விசாரணை அதிகாரி சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
திரைப்பட தயாரிப்பாளர் செயற்குழு தேர்தல்: தேவயானி முதலிடம்!
கீழ்பவானி ஆற்றில் கான்கிரீட் தளம்: சீமான் எதிர்ப்பு!