மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை: சிபிசிஐடி வழக்குப்பதிவு!
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இன்று (அக்டோபர் 14) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள ஸ்ரீமுகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுநிலை அனஸ்தீசியா படித்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த மாணவி சுகிர்தா(வயது 27) கடந்த 5ம் தேதி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து, போலீசார் நடத்திய சோதனையில் மாணவி சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பிரீத்தி, ஷரிஸ் உட்பட இரண்டு சீனியர் பயிற்சி மருத்துவர்கள் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுதப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த 12ஆம் தேதி கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 3 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
தொடர்ந்து கல்லூரி குடியிருப்பில் தங்கியிருந்த பேராசிரியர் பரமசிவத்தை கைது செய்த குலசேகரம் போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் நாகர்கோவில் கிளை சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி குலசேகரம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் நள்ளிரவிலே விசாரணையை தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் சீனியர் மாணவி பிரீத்தியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தலைமறைவாக உள்ள சீனியர் மாணவர் ஹரீஷ் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
SK21 டைட்டில் ரிலீஸ் அப்டேட்… ரசிகர்கள் குஷி!
அனைத்து மகளிருக்கும் ரூ.1000 : பாஜக ஆர்ப்பாட்டம்!