மூன்று மாநிலங்களில் விசாரணை நடப்பதால் கொடநாடு வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய இயலவில்லை என்று சிபிசிஐடி போலீசார் தரப்பில் இன்று (ஜூலை 28) தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த10 மாதங்களாக சிபிசிஐடி போலீசார் பல கட்டங்களாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதனையடுத்து வழக்கு விசாரணையின் இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி போலீசார் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று உதகை நீதிமன்றத்தில் நடந்த வழக்கு நீதிபதி ஸ்ரீதர் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் மாதவன், அரசு வழக்கறிஞர் ஷாஜகான், முக்கிய குற்றவாளி வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர்.
சிபிசிஐடி தரப்பில் “உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் விசாரணை நடைபெறுகிறது. இதனால் கொடநாடு வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய இயலவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
”வழக்கு விசாரணையை எடுத்து ஒரு வருடம் ஆகியும் இடைக்கால அறிக்கை கூட தாக்கல் செய்யாமல் உள்ளதே?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு ”வரும் செப்டம்பர் மாதத்தில் வழக்கு விசாரணை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவித்தனர்.
இதனையடுத்து அடுத்த வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா