புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 24) தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் “சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “வழக்கின் விசாரணை தற்போது முடிந்துவிட்டது. முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில் குடிநீரில் நாற்றம் வருவதாக முரளிராஜா பொய்யான தகவலை பரப்பியுள்ளார். அதன்பிறகு குடிநீர் தொட்டியில் ஏறிய முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று அறிக்கையாக தாக்கல் செய்தார்.
இதையடுத்து இந்த அறிக்கையை பிரமாண மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் வழக்கின் விசாரணையை மீண்டும் இன்று மதியத்திற்கு ஒத்திவைத்தார்.