காவிரி நீர் திறப்பு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு!
கர்நாடக அரசு வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்ற மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 18) முறையிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
ஒவ்வொரு மாதமும் காவிரியில் இருந்து எவ்வளவு நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையில் தமிழகத்துக்கு 53.77 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், கர்நாடக அரசு வெறும் 15.79 டி.எம்.சி. நீரை மட்டுமே வழங்கியுள்ளது.
இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 113 பக்கங்களை கொண்ட விரிவான இடையீட்டு மனுவை தமிழக அரசு ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், “காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரையும் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் காவிரி நதி நீர் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இன்று முறையீடு செய்துள்ளார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக புதிய அமர்வு ஒன்றை அமைத்து உத்தரவிட வேண்டும் என்றும், முறையீட்டு பட்டியலில் இந்த வழக்கு சேர்க்கப்படாத நிலையில், இதுகுறித்து பதிவாளரிடம் அறிவுறுத்தல் வழங்குமாறும் அவர் முறையிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இந்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
’ரஜினி சாரோட நம்பிக்கை தான் படத்தோட வெற்றிக்கு காரணம்’ – நெல்சன்
“மறக்குமா நெஞ்சம்”- ஏ.ஆர்.ரகுமான் புதிய அறிவிப்பு!
வேலைவாய்ப்பு : MRB – யில் பணி!