Bandh in Karnataka Farmers protest in delta

காவிரி நீர் : கர்நாடகாவில் பந்த் – டெல்டாவில் விவசாயிகள் போராட்டம்!

இந்தியா தமிழகம்

தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கர்நாடகா முழுவதும் பல்வேறு அமைப்புகள் பந்த் நடத்தின.

தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் விளை பயிர்கள் மழை, காவிரி நீர் இன்றி கருகி வருகிறது. ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டும், கர்நாடகா உரிய நீரை வழங்காததால் இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் டெல்டா விவசாயிகள் தமிழ்நாட்டுக்கு வேண்டிய நீரை கர்நாடகாவிடம் இருந்து அரசு கேட்டு பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

தமிழ்நாடு 12,500 கன அடி தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறது. ஆனால் தண்ணீர் இல்லை என்பதால் 5,000 கன அடி தண்ணீர் கூட திறக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகிறார்.

இந்தசூழலில் இன்று டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடகமும், தமிழ்நாடும் தங்களது கோரிக்கையை முன்வைத்தன.

இந்த கூட்டத்தின் முடிவில், செப்டம்பர் 28ஆம் தேதி முதல்வர் அக்டோபர் 15ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு நாளொன்றுக்கு 3,000கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பந்த்!!!!

ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்ய காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது. இதனால் கர்நாடகா கேஆர்எஸ் அணையில் இருந்து செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்துக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டது.

இதனை கண்டித்து கர்நாடக நீர்பாதுகாப்பு குழு உள்பட பல்வேறு குழுக்கள் செப்டம்பர் 26ஆம் தேதி பந்த் நடத்தப்படும் என்று அறிவித்தன. டவுன் ஹால், ஃப்ரீடம் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. இதனால் இன்று நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது.

1000 பேர் கைது!
அறிவித்தபடி இன்று மாநிலம் முழுவதும் பந்த்தும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்ற நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னட செயற்பாட்டாளர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகை முன்பு கைது செய்யப்பட்டனர்.

அப்போது பேசிய வாட்டாள் நாகராஜ், “காவிரி நீரை வழங்கும் அரசை எதிர்க்கும் தங்களது போராட்டம் தொடரும். தேவைப்பட்டால் முதல்வர் வீட்டை கூட முற்றுகையிடுவோம்” என்று தெரிவித்தார்.

கன்னட ரக்‌ஷனா வேதிகே தலைவர் நாராயண கவுடா உள்ளிட்டோர் காந்திநகரிலும், விவசாயிகள் சங்க தலைவரான குருபுரு சாந்த்குமார் உள்ளிட்டோர் மைசூர் வங்கி சர்கிள் பகுதியிலும் கைது செய்யப்பட்டனர்.

ஃப்ரீடம் பார்க் பகுதியில் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி ஒருவர் மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுபோன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பந்த் குறித்து கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் சித்தராமையா, “மாநிலத்தில் போதிய பருவ மழை இல்லை. இதனால் போதிய நீர் இருப்பு இல்லாத சூழலில் இரு மாநிலமும் காவிரி நீரை பங்கிட்டுக்கொள்வதில் ஏற்படும் பிரச்சினையை ஏற்கனவே நான் கூறிவிட்டேன்.

இந்த பந்த் மாநில நலனுக்காக இல்லை. சிலர் அரசியலுக்காக, அரசியல் லாபத்துக்காக போராடுகின்றனர்” என்றார்.

முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறுகையில், “தேர்தலுக்கு முன்னதாக கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் மீறி காங்கிரஸ் மேகதாது அணைக்காக பாத யாத்திரை சென்றது. இன்று காவிரி நீருக்காக போராடுபவர்களை காவல் துறையை வைத்து கைது செய்து அந்த போராட்டத்தை நீர்த்து போகவைத்துள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் திமுகவின் பி டீமாக செயல்படுவதே” என்றார்.

இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது தமிழ்நாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கன்னட அமைப்பினர் முதல்வர் ஸ்டாலின் உருவப் படத்துக்கு பொட்டு வைத்து மாலையிட்டு திதி கொடுத்தனர்.

இந்த செயலை கண்டித்து திருச்சியில் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவப் படத்தை வைத்து திதி கொடுத்தனர்.

இதுபோன்ற செயலால் இரு மாநிலங்களில் இருந்துமே கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

அதுபோன்று திருச்சி தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் டெல்டா விவசாயிகள் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக பந்த்தையொட்டி தமிழ்நாட்டில் இருந்து அம்மாநிலத்துக்கு சென்ற பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.

குறிப்பாக நீலகிரி போன்ற இடங்களில் இருந்து தமிழ்நாடு அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பிரியா

ராணுவ வீரரை கைது செய்த கேரள போலீசார்: பின்னணி என்ன?

தங்கத்தை குறி வைக்கும் ஷூட்டர்: யார் இந்த ரமிதா ஜிண்டால்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *