ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் புதுக்கோட்டையில் இன்று (ஜூலை 16) நடத்தும் மாபெரும் விவசாய கருத்தரங்கை தமிழகச் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தக் கருத்தரங்கு சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மிளகு விவசாயி செந்தமிழ்ச் செல்வனின் மிளகுத் தோட்டத்தில் நடைபெற உள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR -IISR) இணைந்து நடத்தும் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி குறித்த இந்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் இன்று (ஜூலை 16) நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி. மெர்சி ரம்யா அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன்,
“இந்தக் கருத்தரங்கில் சமவெளியில் மிளகு, ஜாதிக்காய், லவங்கம், காபி, சர்வ சுகந்தி, இஞ்சி போன்ற பயிர்களை வெற்றிகரமாக பயிர் செய்துள்ள விவசாயிகளும், இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர் கண்டியண்ணன் மற்றும்,
டாக்டர் முகமது பைசல் பீரன் ஆகியோர் கலந்துகொண்டு சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி உத்திகள், அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள், மதிப்புக்கூட்டுதல் போன்றவற்றை விளக்க உள்ளார்கள்.
ஈஷா கடந்த ஆறு ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சியை நடத்தி வருகிறது.
இந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட எண்ணற்ற விவசாயிகள் தற்போது மிளகு சாகுபடி செய்து வருமானம் எடுத்து வருகின்றனர்.
மிளகு மட்டுமல்லாது மற்ற நறுமணப் பயிர்களும் சமவெளியில் நன்கு வளர்வதால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்தப் பயிற்சியை காவேரி கூக்குரல் நடத்துகிறது.
விவசாயிகள் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு நறுமணப் பயிர்கள் சாகுபடி குறித்து அறிந்துகொண்டு, சாகுபடி செய்வதன் மூலம் அவர்களது வருமானத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.