தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 3) குறிப்பாக காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
ஆடிப்பெருக்கு நாளில் நீர் நிலைகள் பொங்கி வரும் என்பது ஐதீகம். நீருக்கு நன்றி செலுத்தும் நாளாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாம் நீர்நிலைகளை வழிபட்டால், நம் வாழ்வில் மகிழ்ச்சியும் இன்பமும் வரும் என்று நம்பப்படுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் 1.70 லட்சம் கன அடி நீரானது முழுவதுமாக உபரி நீரானது காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஏராளமான புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் காவிரி கரையில் உற்சாகமாக வழிபாடு செய்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் தேங்காய், பழங்கள், காய்கறிகள், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை படையலிட்டு காவிரி தாயை குடும்பத்துடன் வணங்கினர். மேலும், புதுமண தம்பதிகள் மாங்கல்ய பாக்கியம் பெறுவதற்காக புதுத்தாலி மாற்றி வழிபாடு செய்தனர். இதேபோல ஸ்ரீரங்கம் மண்டபம் படித்துறையில் பொதுமக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் புனித நீராடவும் ஆற்றில் இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றங்கரையோரங்களில் தீயணைப்பு படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிடிவாதத்தின் எல்லைகளை உடைத்துவிடுங்கள்
டாப் 10 நியூஸ்: தீரன் சின்னமலை நினைவு நாள் முதல் கோட் பாடல் ரிலீஸ் வரை!