இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் மாலை நேர சிற்றுண்டி பக்கோடா. பக்கோடாக்களில் வெங்காய பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பனீர் பக்கோடா என்று பல வகைகள் பிரபலமானவை என்றாலும் எல்லாருக்கும் பிடித்த பக்கோடாவாக இருப்பது காலிஃப்ளவர் பக்கோடாவாக இருக்கிறது. இதை நீங்களும் வீட்டில் செய்து மகிழ இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
காலிஃப்ளவர் – ஒரு கப்
கடலை மாவு – அரை கப்
அரிசி மாவு, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – தலா கால் கப்
வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
காலிஃப்ளவரைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, இஞ்சி – பூண்டு விழுது ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், காலிஃப்ளவர் (கோபி) சேர்த்து, எண்ணெயில் பக்கோடாக்களாகப் பொரித்தெடுக்கவும்.