சாதி அடிப்படையிலான மனுக்களை அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. Caste is an unnecessary burden
கோவை, பொள்ளாச்சி தாலுகா, ஆவல்பட்டி கிராமத்தில் வரதராஜ பெருமாள் மற்றும் சென்றாய பெருமாள் கோயில்கள் உள்ளன.
இந்த கோயில்களுக்கு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக திட்டம் வகுக்க கோரிய விண்ணப்பத்தை விசாரிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, “சாதி என்பது ஒரு சமூக தீமை. சாதியற்ற சமூகம் என்பதுதான் நமது அரசியலமைப்பு இலக்கு. சாதியை நிலைநிறுத்துவதற்கான எதையும் எந்த நீதிமன்றமும் ஒருபோதும் கருத்தில் கொள்ளாது.
சாதி என்பது கற்றுக் கொண்டதில் இருந்தோ, வாழ்வில் செய்த செயல்களின் அடிப்படையிலோ முடிவு செய்யப்படுவதில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது.
நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றி 75ஆண்டுகள் ஆன போதிலும், சமூகத்தின் சில பிரிவுகள் இன்னும் இந்த தேவையற்ற சுமைகளை (சாதி) கீழே இறக்கவில்லை.
சாதியை நிலைநிறுத்தும் எந்தவொரு மனுவும் அரசியலமைப்பிற்கு விரோதமானது மட்டுமல்ல, பொதுக் கொள்கைக்கும் எதிரானது. இதை உறுதியாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது.
சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தை வகுத்த தலைவர்களின் கனவாக இருந்துள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அறங்காவலர் பதவிக்கு, பக்தி, நம்பிக்கையுடன், ஆன்மீக, அற சிந்தனை தான் அவசியமே தவிர சாதி அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். Caste is an unnecessary burden