தமிழ்நாட்டின் தலைநகரில் பத்தாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவனை, ஆசிரியர்கள் ஜாதி ரீதியாக துன்புறுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவன் சிலம்பரசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவனின் ஜாதியையும், அவனது குடும்பத்தையும் பற்றி அப்பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் ராஜசேகர், உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர் மீனாட்சி ஆகியோர் இழிவாக பேசி துன்புறுத்தி வந்துள்ளனர்.
இதனயறிந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கண்டித்த அப்பள்ளியின் தலைமையாசிரியர் மாலதியை, ’அதிகாரிகளிடம் கூறி டிரான்ஸ்பர் செய்துவிடுவோம்’ என மிரட்டியுள்ளனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவன் சென்னை ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில், மாவட்ட கல்வி அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை லோகநாதன் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சி அளித்தன.
எங்களுக்கு யாரு இருக்கா? நாங்க எங்கே போவோம்?
“நான் மயானத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆயுத பூஜையையொட்டி தான் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் 10ஆம் வகுப்பு படிக்கும் என் பையன் சிலம்பரசன், பள்ளியில் தன்னை கடந்த ஒரு வருடமாக ஜாதி பெயர் சொல்லி ஆசிரியர்கள் துன்புறுத்தி வருவதாக கூறி அழுதான். அவனை 9ஆம் வகுப்பு முதல் வகுப்பறையை கூட்டிப் பெருக்க சொல்லி ஆசிரியர்கள் வற்புறுத்தி வந்துள்ளனர். 10ஆம் வகுப்பு வந்த பிறகு அதனை செய்ய சிலம்பரசன் மறுக்கவே, அவனையும், எங்கள் குடும்பத்தையும் ஜாதி ரீதியாக அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் இழிவாக பேசி அவமானப்படுத்தியுள்ளனர்.
மேலும் கடந்த மாதம் நடந்த இடைத்தேர்வில் சிலம்பரசனுக்கு குறைவான மதிப்பெண்களையே ஆசிரியர்கள் அளித்துள்ளனர். இதுகுறித்து என் மச்சான் பள்ளிக்கு சென்று கேட்டபோது ‘ஆமா நாங்க அப்படி தான் போடுவோம்’ என திமிராக பதில் தெரிவித்துள்ளனர்.
’சரி மாணவனின் பேப்பரை கொடுங்க.. நாங்க பாக்குறோம்’ என்று கேட்டதற்கு, ‘உங்களுக்கு என்ன அவ்வளவு திமிரா ஆயிடுச்சா’ என கூறி அவரையும் ஜாதி ரீதியாக அசிங்கமாக திட்டியுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிலம்பரசன் பறையடித்து ஆடியுள்ளான். இதனைக்கண்ட பி.டி ஆசிரியர் சீனிவாசன், மீனாட்சி ஆகியோர் ‘நல்லாதான் பறை அடிக்கிற, நீயும் உங்க அப்பா மாறி வேலை பாக்கலாம்’ என தொடர்ந்து பேசி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இதயெல்லாம் தாங்க முடியல… நாங்க கஷ்டப்பட்டவங்க. எங்களுக்கு யாரு இருக்கா? நாங்க எங்கே போவோம்?” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த நிலையில் பள்ளி மாணவனுக்கு இழைக்கப்பட்ட துன்பத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக பொதுச்செயலாளர் ஞானசேகரன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தலைமை ஆசிரியர்களுக்கே அச்சுறுத்தல்!
அதில், “சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை அப்பள்ளியில் பணியாற்றும் கணித பட்டதாரி ஆசிரியை மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் மாணவன் குடும்பத்தை பற்றி இழிவாக பேசியும் மாணவனின் ஜாதியை பற்றி பேசியும் இழிவுபடுத்தி உள்ளனர்.
ஜாதி வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் கல்வி கற்று உயர்கல்வியில் சேர வேண்டும், சேர்ந்த பிறகு மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வழிவகை செய்து உள்ளது.
இவ்வாறு அரசு செய்கின்ற நல்முயற்சிக்கு எதிராக அடித்தட்டு மாணவர்களை அவமானப்படுத்துவது ஆசிரியர்களின் கண்ணியக்குறைவான செயல்பாடாக எமது கழகம் கருதுகிறது.
மேலும் பள்ளியில் பணியாற்றும் முதுகலை கணித ஆசிரியர் உள்ளிட்ட சில ஆசிரியர்கள் அங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியரை பணி செய்ய விடாமல் பள்ளியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேற்கண்ட ஆசிரியர்கள் அப்பள்ளிக்கு மாறுதல் பெற்று வருகின்ற தலைமை ஆசிரியர்களை அவர்களுக்கு இருக்கும் அதிகாரிகளின் செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டி அவர்கள் சொல்படி கேட்கும்சூழலை உருவாக்குவதாக தெரிகிறது.
மேலும் அவர்களின் பேச்சைக் கேட்காமல் இருந்தால் அரசியல் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் செல்வாக்கோடு தலைமை ஆசிரியர்களை தொடர் மாறுதலுக்கு உட்படுத்துவதாகவும் தெரிகிறது.
தற்போது சிறப்பாக பணியாற்றக் கூடிய தலைமை ஆசிரியரையும் புத்தாண்டுக்குள் உங்களை பணி மாறுதல் செய்வோம் என்றும் சொல்வது என்பது மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றக்கூடிய தலைமை ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற செயலாக எமது அமைப்பு கருதுகிறது.
கல்வித் துறையும் அரசியல் செல்வாக்கும் உள்ளவர்களின் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் எனில் அரசு பள்ளிகள் எவ்வாறு சிறப்பான பள்ளிகளாக செயல்பட முடியும்?
இவ்வாறு அராஜகமான முறையில் நடப்பவர்களுக்கு எதிராக கல்வித் துறையும்
மாநில அரசும் உடனடியாக அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு எமது கழகம் மாநில அரசையும் கல்வி துறையையும் கேட்டுக் கொள்கிறது.
மாநிலத்தில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் புதிதாக ஒரு பள்ளிக்குச் செல்லும் போது ஒரே இடத்தில் பல ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களை பணி செய்ய விடாமல் இன்னல்களுக்கும் சிக்கல்களுக்கும் உருவாக்குகின்றனர்.
இதனால் பல தலைமை ஆசிரியர்கள் மாநிலத்தில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஊடகத்திலும் சமூக வலைத்தளத்திலும் பிரச்சினை குறிப்பிட்ட பள்ளியை பற்றி வரும்போது கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் தவறு செய்த ஆசிரியர்களை தண்டிக்காமல் தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்குகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசும், கல்வி துறையும் மாநிலத்தில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுடைய பணி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சரியான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
மேலும் மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை இல்லாமல், ஜாதி ரீதியாக மாணவர்களை இழிவுபடுத்தும் அப்பள்ளியின் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு எமது கழகம் மாநில அரசை கனிவோடு கேட்டுக்கொள்கிறது” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
எப்.ஐ.ஆர் லீக்… மத்திய அரசு விளக்கம் அளித்தால் நம்பனுமா? : சீமான் கேள்வி!
புத்தாண்டை கொண்டாட புதுச்சேரிக்கு படையெடுக்கும் கூட்டம் : களமிறங்கிய 2000 போலீசார்!