சுவிக்கி, சொமேட்டோ ஆட்களை கண்காணிக்க வழக்கு : டிஜிபிக்கு உத்தரவு!

Published On:

| By Kavi

டெலிவரி ஆட்களை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவர்கள், சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் உணவு டெலிவரி செய்யும் ஆடையை அணிந்து வந்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்தநிலையில் பொருட்களை வீட்டிற்கே சென்று டெலிவரி செய்யும் ஆட்களை கண்காணிக்க வேண்டும் என்று புதுக்கோட்டையைச் சேர்ந்த வித்யானந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “உணவு மற்றும் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் ஆட்களுக்கு சீருடை இருந்தும், அவர்களுக்கேன அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்கள் ஏதும் இல்லை. டெலிவரி பாய்ஸ் ஹெல்மெட் அணிந்து வருவதால் அவர்களை எளிதில் அடையாளம் காண முடிவதில்லை. அரசியல் கட்சித் தலைவர் ஒருவரை டெலிவரி செய்யும் ஆட்கள் போல் வந்து கொலை செய்திருக்கின்றனர்.

இந்தநிலையில், டெலிவரி ஆட்களை கண்காணித்து முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இந்த விவகாரத்தில் தமிழக டிஜிபிக்கு நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று” கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று (ஜனவரி 22) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக டிஜிபி நான்கு வார்த்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

சுவிக்கி, சொமேட்டோ, டன்சோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel