விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங், காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வருபவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்வதாக பல புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை எஸ்.பி. உள்ளிட்ட காவல் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கும், ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டனர்.
அதுபோன்று பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
ஏற்கனவே அவர் நெல்லைக்கு சென்று விசாரணை நடத்திய நிலையில் இன்று (ஏப்ரல் 17) இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார். அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் விசாரணையின் போது, இன்று மேலும் 5 பேர் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்தனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வரும்நிலையில், விசாரணை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக காவல்துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு எதிரான விசாரணை என்பதால் அமுதா ஐஏஎஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இந்தசூழலில் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதத்தை பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்ரவதை செய்தல் ஆகிய குற்றங்களுக்காக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 326ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரியா
இளையராஜா இசையில் ’ஸ்ரீ இராமானுஜர்’ படம்!
அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன்கள்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!