murder case against police officers in thoothukudi firing
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 18 வயது ஸ்னோலின் என்ற மாணவியும் பலியானார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா கெஜதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் விசாரணை நடத்தி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென்மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் உள்ளிட்ட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.
இந்தசூழலில், தற்போது தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும், அப்போதைய தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவுக்கு பணிமூப்பு அடிப்படையில் டிஜிபியாக தமிழக அரசு கடந்த ஜனவரி 2ஆம் தேதி பதவி உயர்வு வழங்கியது.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்று தமிழக அரசு அறிவித்தது.
அதில், “அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, 17 காவல் துறை அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சைலேஷ் குமார் யாதவ், கபில் குமார் சி. சரத்கர், ஆகிய இந்திய காவல் பணி அலுவலர்கள், மகேந்திரன், லிங்கத்திருமாறன் ஆகிய காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு ஆய்வாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தான் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுத்தால் போதாது, சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஸ்னோலின் அம்மா வனிதா(50) நேற்று (ஜனவரி 5) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதன்மை அமர்வில் வனிதா பொது நல மனு தாக்கல் செய்தார்.
அதில், “அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின் படி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று 5 வருடமாக காத்திருந்தோம். ஆனால் இயந்திரதனமாக அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கையை எடுக்க தவிர்க்கிறது.
எனவே அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதும் என்ற அரசாரணையை ரத்து செய்ய வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான போலீஸ், வருவாய்த் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. எனினும் இந்த தொகையை ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும்.
காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் . துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அருகில் இறந்தவர்களுக்கு நினைவிடம் கட்டுவதற்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆன்லைன் மூலம் ஆஜரானார். அவரது குரல் சரிவர கேட்காததால் நேரில் ஆஜராவதாக கூறினார். கூடுதல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டார்.
இதை ஏற்றுக்கொண்டு வழக்கை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அதன் நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜனவரி 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“அஞ்சனாத்ரி” உலகம் தெரியுமா? – அனுமன் படத்தின் கதை இதுதான்!
பாகிஸ்தானை க்ளீன் ஸ்வீப் செய்த ஆஸ்திரேலியா… கண்ணீர் விட்ட வார்னர்!
murder case against police officers in thoothukudi firing