கரூரில் சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது இன்று (மே 27) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையானது மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்போடு 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வந்த கார் கண்ணாடிகளையும் உடைத்ததால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் பாதுகாப்பு கேட்டு கரூர் நகர காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததோடு, கரூர் எஸ்பி அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர்.
மேலும் தாக்குதலில் காயமடைந்த 4 வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில் திமுக தொண்டர் சுரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் வருமான வரித்துறை பெண் அதிகாரி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோனிஷா
கரூர் துணை மேயர் வீட்டுக்கு சீல்: 2வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு!
கிச்சன் கீர்த்தனா: தக்காளி – மணத்தக்காளி ரசம்