கார் சிலிண்டர் வெடித்த வழக்கு: கோவை விரைந்தது என்.ஐ.ஏ!
காரில் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோயம்புத்தூர் விரைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி காரில் பயணித்த ஜமேஷா முபீன் என்ற நபர் சிலிண்டர் வெடித்து உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த கார் சிலிண்டர் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜமேஷா முபீன் உயிரிழந்த வழக்கில், உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா மற்றும் முகமது அசாருதீன், ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை போலீசார் அக்டோபர் 23-ஆம் தேதி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது உபா, சதி செய்தல், இரு பிரிவினர் இடையே விரோதத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் 8-ஆம் தேதி வரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்த வெடி விபத்து, என்.ஐ.ஏ விசாரணை நடத்துவதற்கு முகாந்திரம் உள்ள வழக்காக கருதப்பட்டுள்ளது.
அதன்படி வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக முதற்கட்ட கள ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று(அக்டோபர் 25) இரவு விமானம் மூலம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோயம்புத்தூர் சென்றுள்ளனர்.
தற்பொழுது வரை தமிழக காவல்துறையிடம் உள்ள இந்த வழக்கு முறையாக ஆவணங்கள் மற்றும் தடவியல் அறிக்கை உள்ளிட்ட மொத்த கோப்புகளுடன் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
அங்கு இருந்துதான் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கும்.
ஆனால் அதற்கு முன்னதாகவே கள ஆய்வு மேற்கொள்ள தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்கிற அடிப்படையில் கோயம்புத்தூர் விரைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
தேசிய புலனாய்வு முகமையின் டி.ஐ.ஜி மற்றும் கண்காணிப்பாளர் தலைமையில் குழுவினர் கோவையில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் பிற்பகலில் விசாரணையை துவக்குவார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.
கலை.ரா
சர்தார் இரண்டாம் பாகம் உறுதி : கார்த்தி
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்… ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்! – வைகோ