கோவை கார் சிலிண்டர் விபத்து: சந்தேகம் எழுப்பும் பாஜக!

தமிழகம்

கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று காலை (அக்டோபர் 23 ) மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி பலியானார்.

முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியது தெரியவந்தது.

இந்நிலையில், கோவை கார் சிலிண்டர் விபத்து சம்பவம் அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

விசாரணையை வரவேற்ற பாஜக!

இது குறித்து, இன்று (அக்டோபர் 23 ) அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

”தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது.

பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளதை தமிழ்நாடு பாஜக வரவேற்கிறது.

தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதைக் கருத்தில் கொண்டு,

இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு சம்பந்தம்?

மேலும், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இச்சம்பவம் நடந்துள்ள நேரம் இடம் ஆகியவற்றைப் பார்க்கும் போது இது சதியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளதால் தீவிர விசாரணை தேவை என்று கூறியுள்ளார்.

பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள பதிவில் “கோவையில் நடந்த கார் வெடி விபத்திற்கும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா என்ற கோணத்தில் தமிழ் நாடு அரசு விசாரிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம்: நெல்லை, விழுப்புரத்தில் போலீசார் குவிப்பு!

புகார் அளித்த பெண்ணை அறைந்த பாஜக அமைச்சர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *