மாமனார், மாமியாரை துன்புறுத்தியதாக கூறி மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற சட்டத்தில் இடம் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த காயத்ரி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் மதுரை சூர்யா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து அவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறேன்.
எனது கணவரின் தந்தை அம்பிகாபதி மற்றும் அவரது குடும்பத்தினர் எனக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் எனது மாமனார், மாமியார் இணைந்து முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விதிகளின்படி, மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரியிடம் (DRO) நான் எனது மாமனார் மாமியாரை துன்புறுத்துவதாக மனு செய்து எனக்கு எதிராக உத்தரவு பெற்றுள்ளனர்.
அந்த உத்தரவில் காவல்துறை உதவியுடன் என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, வீட்டை மீட்டு மாமனார் மாமியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என காயத்ரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி, மாவட்ட முதியோர் பாதுகாப்பு அலுவலர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.
முதியோர் பாதுகாப்பு சட்டப்படி மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் , முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2007 விதியின்படி,
மூத்த குடிமக்களான மாமனார் மற்றும் மாமியாருக்கு மருமகள் நேரடியான உறவோ வாரிசோ கிடையாது.
எனவே இந்த சட்டம் மருமகளுக்கு பொருந்தாது. ஆகையால் மருமகளை வீட்டை விட்டு வெளியேற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகக் கூறியுள்ளார்.
கலை.ரா
பணி ஓய்வு பெற்ற மோப்பநாய்: பாசத்துடன் வழியனுப்பி வைத்த அதிகாரிகள்!
Comments are closed.