தொடர் விடுமுறையை முன்னிட்டு 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதால் கிளாம்பாக்கத்திற்கு மாற்ற முடியாது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இன்று இரவு முதல் சென்னைக்குள் வரக்கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை ஆணையர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து தான் இயங்கும் என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை முன்பதிவு என்பது 30 முதல் 90 நாட்களுக்கு முன்பே நடைபெறுகிறது.
இந்நிலையில் ஜனவரி 22 அன்று போக்குவரத்துத் துறை ஆணையர் ஆம்னி பேருந்துகளை ஜனவரி 24 முதல் சென்னை நகருக்குள் இயக்க கூடாது என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். 90 நாட்களுக்கு முன்பதிவு நடைபெற்றுள்ள போது உடனே 2 நாட்களில் மாற்றுவது என்பது முடியாத காரியம். அப்படி மாற்றுவதற்கான வாய்ப்புகளும் எதுவும் இல்லை.
இன்றைக்கு கிட்டத்தட்ட 1,500 பேருந்துகளில் 60 ஆயிரம் பயணிகள் தென் தமிழகத்திற்கு செல்வதற்காக முன்பதிவு செய்துள்ளார்கள். நாங்கள் சாதாரண நாட்களில் 850 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 1,250 பேருந்துகளும், விழா காலங்களில் 1,600 பேருந்துகள் வரை இயக்கி கொண்டிருக்கிறோம். இப்போது கிளாம்பாக்கத்தில் 144 பார்க்கிங் பே தான் இருக்கிறது. 1000 பேருந்துகளை 144 பார்க்கிங் பேயில் எப்படி நிறுத்த முடியும்.
இதை தான், கடந்த 3 மாதங்களாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கோயம்பேட்டில் இருந்து காலி செய்ய சொன்னால் எங்கு செல்வது. பேருந்துகளை நிறுத்துவதற்கான வசதி எங்கு இருக்கிறது.
ஆனால் இதுவரை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக எந்த அதிகாரியும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. அரசு ஏன் இந்த இரண்டு நாளில் இவ்வளவு தீவிர நடவடிக்கை எடுக்கிறது என்று தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள். இதில் நிறைய பாதிக்கப்படப்போவது பயணிகள் தான். அதனால் பயணிகளின் நலன் கருதி முதலமைச்சர் இந்த பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2002-ல் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றும் போது சங்கம் சார்பில் ஒரு வழக்கு தொடுத்தோம். இந்த வழக்கில் 2003-ல் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவை மீறியும் அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள் என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதை தவிர வேறு வழியில்லை. நாங்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும் பயணிகளை ஏற்றிக் கொண்டு தான் செல்கிறோம். படிப்படியாகத் தான் அனைத்தையும் செய்ய முடியும், உடனடியாக எதையும் செய்ய முடியாது.
வரதாஜபுரத்தில் ஆம்னி பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் எந்த விதமான கட்டுமான அமைப்பும் இல்லை. முன்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தால் அங்கு செல்ல தயாராக இருக்கிறோம்.
ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயக்கப்படும். எனவே பயணிகள் கவலையடைய வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மாநாடு முடிந்து… உதயநிதி கூட்டும் திடீர் இளைஞரணிக் கூட்டம்! எதற்காக?
அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியனின் டூயட் சாங்!