கல்லூரி மாணவர்கள் குடியிருப்பில் கஞ்சா… களமிறங்கிய1000 போலீசார்: என்ன நடந்தது?

Published On:

| By Kavi

சென்னையை அடுத்த பொத்தேரியில் நேற்று போலீசார் நடத்திய கஞ்சா தேடுதல் வேட்டையில் கைதான மாணவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், அதனால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்தநிலையில் தாம்பரம் அருகே பொத்தேரியில் தனியார் கல்லூரி அமைந்துள்ள சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக தாம்பரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் தனியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அதிகம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சோதனை நடத்தினர்.

தாம்பரம் நகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரின் சுமார் 1000 போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர்.

தாம்பரம் கூடுதல் காவல் ஆணையர் சி.மகேஸ்வரி மேற்பார்வையில், பொத்தேரி அபோட் வேலி என்ற பெயரில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள வளாகத்தில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. இங்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் வாடகைக்கு தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை முதலே போலீசார் நடத்திய சோதனையில் அரை கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில், ஸ்மோக்கிங் பார்ட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 15 மாணவர்களிடம் இருந்து இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் கூறுகையில், “தாம்பரம் நகர போலீசார் பொத்தேரியில் உள்ள அபோட் வேலி அடுக்குமாடி குடியிருப்பில் தீவிர சோதனை நடத்தினர். இந்த குடியிருப்பு வளாகத்தில் 22 அடுக்குமாடி டவர்கள் உள்ளன. ஒவ்வொரு டவரிலும் 4 மாடிகள் உள்ளன. ஒவ்வொரு மாடியிலும் 4 ஃபளாட்டுகள் உள்ளன. மொத்தம் 668 குடியிருப்புகள் உள்ளன. இதில் மட்டும் 3000 மாணவர்கள் தங்கியுள்ளனர்.

இங்கு 1000 பேர் கொண்ட 168 போலீஸ் டீம் களமிறங்கியது. 15 மாணவர்களிடம் கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

அபார்ட்மெண்டில் இருந்த உரிமை கோரப்படாத 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஏ+ பிரிவு ரவுடி செல்வமணி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது. கூடுவாஞ்சேரியில் பதுங்கியிருந்த அவரும் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் இருந்து கஞ்சா சாக்லேட்டுகளை வாங்கி வந்து மாணவர்களுக்கு விற்பனை செய்த ஒரு தாபா உரிமையாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றங்களைச் செய்ய வழிவகுக்கும், போதைப்பொருளை விநியோகம் செய்து, அப்பாவி மாணவர்களை போதைப்பொருள் உட்கொள்ளும்படி தூண்டி, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் தொழிலில் ஈடுபடும் குற்றவாளிகளை அடையாளம் காண டிஜிட்டல் தரவுகளையும் எடுத்துள்ளோம்” என்றும் கூறினார்.

செல்வமணியிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா, 4 பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்றதாக மகேஷ் குமார், சுனில் குமார், டப்லு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைதான 21 பேரில் 4 மாணவர்கள் காவல் நிலைய பிணையில் வெளியில் விடப்பட்டனர். மீதமுள்ள 11 மாணவர்கள் உட்பட 14  பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்ப்படுத்தப்பட்டனர். மாணவர்களின் நலன் கருதி சொந்த ஜாமினில் அவர்களை நீதிமன்றம் இன்று காலை  விடுதலை செய்தது.

மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த மகேஷ் குமார், சுனில் குமார், டப்லு 3 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 1000 போலீசார் களமிறங்கி சோதனை வேட்டையில் ஈடுபட்டு மாணவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்திருப்பது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

திமுக முப்பெறும் விழா அறிவிப்பு: யார் யாருக்கு எந்தெந்த விருது?

நடிகை மினு முனீரின் பாலியல் குற்றச்சாட்டு: மறுத்த மலையாள நடிகர் ஜெயசூர்யா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share