சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொண்ட விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 முதல் 2014 ஆம் ஆண்டு வரை விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 2021, நவம்பா் 19ஆம் தேதி,
’சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்குத் தொடரக் கூடாது’
என விளக்கம் கேட்டு, கோவை ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விசாரணையில்,
’ஈஷா அறக்கட்டளை மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இந்த நிலையில் நீதிபதிகள் ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில், ’ஈஷா அறக்கட்டளை என்பது கல்வி நிறுவனமா… இல்லையா என்பது தற்போது வரையில் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.
அதோடு 2 லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில் 10 ஆயிரம் சதுரமீட்டர் மட்டுமே கல்வி நிறுவனமாக செயல்படுத்தலாம்.
மற்ற பரப்பளவை கல்வி நிறுவனமாக செயல்படுத்த முடியாது. இதனால் நடவடிக்கை எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும்’ என வாதத்தை வைத்தது.
ஈஷா தரப்பில், ‘உடல் நலம் மேற்கொள்ள அறக்கட்டளை துணை புரிவதால் இதனையும் கல்வி நிறுவனமாக கருத வேண்டும்’ என்கிற வாதத்தை வைத்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், ’யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும் என்பதால் சுற்றுச்சூழல் விலக்கு பெற உரிமை உள்ளது’ என்ற கருத்தினை முன்வைத்தனர்.
இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை இன்று (டிசம்பர் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ஈஷா அறக்கட்டளை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) அறிவிப்பை எதிர்த்து, யோகா நிறுவனங்களை கல்வி நிறுவனங்களின் கீழ் வகைப்படுத்தி,
சுற்றுச்சூழல் அனுமதியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.
கல்வி நிறுவனம் என்ற வரையறையில் ஈஷா அறக்கட்டளையின் செயல்பாடுகளும் உள்ளடங்கும் என்றும்,
EIA அறிவிப்பு கல்வி நிறுவனங்களுக்கு ஒருபோதும் பொருந்தாது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியது.
இந்த விளக்கத்தின் பேரில், சட்டத்தின் தவறான விளக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட ஷோ காஸ் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
ஈஷா அறக்கட்டளை எப்போதும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுக்கும் இணங்குவதற்கும் உறுதி பூண்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
என் உயரம் எனக்கு தெரியும்: அமீரின் அரசியல் பதில்!
குஜராத் அமைச்சரவை: கிரிமினல் வழக்கில் 4 அமைச்சர்கள்!
Government of Tamil Nadu should ask for a full bench revision appeal otherwise file appeal in supreme court without delay.