பலமான விருந்து, பிரியாணி சாப்பிட்ட பிறகு சோடா குடிப்பது பலருக்கும் பழக்கமாக இருக்கிறது. குடித்தால்தான் நிம்மதியாகிறது… திருப்தியாக இருக்கிறது என்கிறார்கள். இது சரியா..?
“எப்போதோ ஒருமுறை பிரியாணி சாப்பிட்டு, அது செரிமானமாக சோடா குடிப்பதில் தவறில்லை. சிலர் வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை பிரியாணியோ, பலமான விருந்தோ சாப்பிடுவார்கள். அப்படிச் சாப்பிடும்போதெல்லாம் சோடா குடிப்பார்கள். அதை வழக்கமாகவே மாற்றிக்கொள்வது நிச்சயம் தவறுதான்.
ஏற்கெனவே வயிற்று உப்புசம், அசிடிட்டி உள்பட வயிறு, குடல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் நிச்சயம் சோடாவை தவிர்க்க வேண்டும்.
சோடா குடிப்பதால் வயிற்று உப்புசம், பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பது போன்ற பிரச்சினைகள் வரும்.
எனவே, பலமான உணவு உண்ட பிறகு செரிமானத்துக்கு எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். சீரகம், ஓமம் சேர்த்துக் கொதிக்கவைத்த நீர் அருந்தலாம்.
அதுவே செரிமானத்தைச் சீராக்கும். நேரம் கடந்து சாப்பிடுவதும் செரிமானத்தை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்கிறார்கள் டயட்டீஷியன்கள்.