எடைக்குறைப்பில் ஈடுபடும் பலர், முறையான நிபுணர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் எடையைக் குறைக்கும் எண்ணத்தில் பல விஷயங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்.
உதாரணத்துக்கு தினமும் இரவில் பழங்கள் மட்டுமே சாப்பிடுவது அல்லது சூப் மட்டுமே குடிப்பது. ஆனால், இது எடைக் குறைப்புக்கு உதவுமா, அது சரியான பழக்கமா என்பது போன்ற சந்தேகங்களும் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு என்ன?
“இரவு உணவுக்கு வெறும் பழங்களோ, சூப்போ, அளவு குறைவான உணவுகளையோ எடுத்துக்கொள்ளும்போது அவற்றில் புரதச்சத்து இல்லாத பட்சத்தில், நள்ளிரவில் உங்களுக்குப் பசி உணர்வு எற்படும்.
அதன் காரணமாக தூக்கம் பாதிக்கப்படும். அது மட்டுமன்றி நள்ளிரவுப் பசியின் காரணமாக அந்த நேரத்தில் எதையாவது சாப்பிட முனைவார்கள்.
அவை ஆரோக்கியமற்ற உணவுகளாக இருக்கும்பட்சத்தில் சூப்பும் பழங்களும் எடுத்துக்கொண்டதன் பலனே வீணாகிப்போகும்.
சூப்பும் பழங்களும் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகள். எனவே, நள்ளிரவில் ஏற்படும் பசி உணர்வைக் கட்டுப்படுத்தவும், தூக்கம் பாதிக்கப்படாமலும் இருக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவதுதான் சிறந்தது.
அதிலும் குறிப்பாக, நீங்கள் எடைக்குறைப்பு முயற்சியை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்தால், இரவில் சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை கலோரிகள் எடுத்துக்கொள்கிறீர்கள், அதை அந்த நாள் முழுவதும் எப்படி எரிக்கிறீர்கள்,
அதிலும் பசி உணர்வு இல்லாமல் என்பதுதான் முக்கியம். அதுதான் எடைக்குறைப்புக்கும் உதவும்.
எனவே, எடைக்குறைப்பு முயற்சியைத் தொடங்கும் முன் சரியான நிபுணரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையோடு உங்களுக்கான உணவுத்திட்டத்தைக் கேட்டறிந்து பின்பற்றுவதுதான் சரி” என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.