ஆரோக்கியத்தின் மேல் அக்கறை கொண்டவர்களின் அறிவுரைப் பட்டியலில் `ஏ.பி.சி ஜூஸ்’ என்ற ஒன்று தற்போது இடம்பெற்று வருகிறது. `ஒரு வாரத்துக்கு இந்த ஜூஸைத் தொடர்ந்து குடித்தீர்களானால் உங்கள் சருமமும் கூந்தலும் பளபளக்கும்…’ என ஏ.பி.சி ஜூஸுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் வீடியோக்கள் போடுவோர் எக்கச்சக்கம்.
ஏ.பி.சி ஜூஸ் என்பது என்ன… அது எல்லோருக்குமானதா?
“ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் இந்த மூன்றையும் வைத்துச் செய்யப்படுவதாலேயே இதற்கு ‘ஏ.பி.சி ஜூஸ்’ என்ற பெயர் வந்தது.
இன்று ஜூஸ் கடைகளில்கூட பரவலாக விற்கப்படுகிறது. ஜூஸ் குடிப்பதிலும் ஆரோக்கியத்தைத் தேடும் நபர்களுக்கு இது ஃபேவரைட்டாக இருக்கிறது.
இந்த ஏ.பி.சி ஜூஸ் எல்லோருக்குமானதா என்கிற தெளிவு இல்லாமலேயே பலரும் அதை தினமும் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
முதலில் இதன் ஆரோக்கிய பலன்களைப் பார்ப்போம். ஏ.பி.சி ஜூஸை உங்கள் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக்கொள்ளும்போது, அதன் மூலம் அபரிமிதமான ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்து உடலுக்குக் கிடைக்கிறது.
சிறந்த நோய் எதிர்ப்புத்திறனைக் கொடுக்கக் கூடியது. உடற்பயிற்சி செய்வோருக்கும் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவோருக்கும் சிறந்த ஆற்றலை வழங்கக்கூடியது. சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு அடிப்படையான மற்றும் அவசியமான அத்தனை சத்துகளும் இந்த ஜூஸில் உண்டு.
காய்கறிகள் மற்றும் பழங்களை முறையாக எடுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு மிகச்சிறந்த மாற்று இது. ஏ.பி.சி ஜூஸில் வைட்டமின் ஏ பி6, சி மற்றும் இ, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம் எனப் பல ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கும்.
இத்தனை ஊட்டச்சத்துகள் நிறைந்த பானம் என்பதால் இதைக் குடிப்பதன் மூலம் அன்றைய பொழுதை ஆரோக்கியத்துடன் தொடங்க முடியும்.

எல்லோரும் குடிக்கலாமா?
பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் முற்பகல் இடைவேளையிலோ மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பிறகோ இந்த ஜூஸை எடுத்துக்கொள்ளலாம்.
விளையாட்டுத் துறையில் ஈடுபடுவோர், கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகோ, விளையாடி முடித்த பிறகோ இந்த ஜூஸைக் குடிக்கலாம்.
தனிநபர்கள் உடற்பயிற்சி செய்யத் தேவையான ஆற்றலைப் பெற விரும்பினால், உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு முன்பான எனர்ஜி டிரிங்க்காக இதைக் குடிக்கலாம்.
மாலை நேரத்தில் காபி, டீ, கோலா பானங்கள் குடிக்க விரும்பும் பதின் பருவத்தினர், அவற்றுக்கு மாற்றாக இதைக் குடிக்கலாம்.
சரும அழகும் ஆரோக்கியமும் புறப்பூச்சுகளால் வருவதல்ல. உணவின் மூலமே அது சாத்தியம். அந்த வகையில் ஆரோக்கியமான சருமம் வேண்டும் என விரும்புவோர், வாரத்தில் மூன்று நாள்கள் ஏ.பி.சி ஜூஸ் குடிக்கலாம்.
ஆனால், இந்த ஜூஸில் உள்ள சர்க்கரையானது உடனடியாக ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். பொதுவாகவே நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ஜூஸ் குடிக்க வேண்டாம் என்றே அறிவுறுத்தப்படுவார்கள். அது எல்லா ஜூஸுக்கும் பொருந்தும்.
பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு உள்ளவர்களும் ஜூஸ் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் இந்த ஜூஸுக்கு `நோ’ சொல்லியே ஆக வேண்டும்” என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
ராஜ்