திருவண்ணாமலை மலையில் சில நாட்களுக்கு முன் பெருமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில்… வருகிற டிசம்பர் 13 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் இன்று (டிசம்பர் 10) விளக்கியுள்ளார்,
திருவண்ணாமலை மாவட்டம் கீழபெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி இன்று கேள்வி நேரத்தில்,
‘திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, ஒவ்வொரு வருடமும் 2 ஆயிரம் பேர் மலையேறுகிறார்கள். இந்த வருடம் மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில்… இந்த வருடம் தீபத் திருவிழாவின் போது அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? அரசு என்ன திட்டம் அமைத்திருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,
“சங்க காலத்தில் இருந்தே தீபத் திருவிழா நடந்து வருகிறது. இந்த வருடம் 40 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் நேரடியாக கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி துணை முதல்வர் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் கள ஆய்வுக்கு வந்தார். அதன் பின் 6 ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. மாவட்ட அமைச்சர் அண்ணன் எ.வ. வேலு தலைமையில் நான் பங்கேற்ற இரு கூட்டங்கள், தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.
சமீபத்தில் பெருமழை ஏற்பட்டு அதன் காரணமாக திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே. போர்க்கால அடிப்படையில் நம்முடைய முதலமைச்சர் அதை தீர்த்து வைத்தார்.
தீபத் திருவிழாவின் போது மலை மீது கொப்பரை தீபம் ஏற்றப்படுவது இன்றியமையாத ஒன்று. சான்றோர்கள் காலத்தில் இருந்து எடுக்கப்படும் இந்த விழா தடைபடக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
அதன் அடிப்படையில் மண்ணியல் நிபுணர் சரவணப்பெருமாள் ராஜா தலைமையிலான குழு கடந்த 7,8,9 ஆகிய மூன்று நாட்கள் மலையில் ஆய்வு நடத்தி, அந்த அறிக்கை முதல்வரிடம் இன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி முதல்வர் எங்களுக்கு இட்டிருக்கிற உத்தரவின் நிலை என்னவெனில்…
350 கிலோ கொண்ட கொப்பரைத் திரி மேலே எடுத்துச் செல்லப்பட வேண்டும். 40 டன் நெய் மேலே எடுத்து செல்லப்பட வேண்டும்.
இதற்காக எவ்வளவு மனித சக்தியை பயன்படுத்திட முடியுமோ அதைப் பயன்படுத்தி, எந்த வித உயிரிழப்பும், அசம்பாவிதமும் ஏற்படாமல் தீபத் திருவிழாவை நடத்திட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர்.
ஆகவே சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மனித சக்தியை பயன்படுத்தி, கார்த்திகை தீபம் இந்த வருடமும் மலையின் உச்சியில் எரியும்” என்று பதிலளித்தார்.
–வேந்தன்
ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து விலகினாரா?
ஜாமீன் கிடைத்தும் சிறையில் கைதிகள் : நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Comments are closed.